ஜார்க்கண்ட்: ஜேஎம்எம், காங்கிரஸ் எம்எல்ஏக்களை 'விலைபேசுகிறது' பாஜக.. முதல்வர் ஹேமந்த் சோரன் பகீர்
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசி வருவதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டி இருக்கிறார். ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக பாஜக முயற்சித்துக் கொண்டே இருக்கிறது என்றும் ஹேமந்த் சோரன் விமர்சித்தார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு. அதனால் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க பேரம் பேசுகிறது பாஜக. பாஜகவின் இந்த முயற்சியில் சிக்கியவர்தான் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியையே இரண்டாக உடைக்கும் வகையில் பாஜக படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் கூறியதாவது: 2019-ம் ஆண்டு ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது முதல் 5 ஆண்டுகளாக இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. பாஜக இப்போதும் எம்.எல்.ஏ.க்களை விலைபேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் இந்த முயற்சி ஒருபோதும் கை கொடுக்காது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை உடைக்க பாஜக சதி செய்கிறது. ஆனால் எங்களது எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் பாஜகவை நம்பவில்லை. அதனால் பாஜகவின் அத்தனை முயற்சிகளும் வீணாகவே செய்யும். ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்துக்கு வரும் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்களிடம் ஏன் எங்கள் மாநிலத்துக்கான நிதியை வழங்கவில்லை? ஏன் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை தரவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.












Click it and Unblock the Notifications