பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச சிலிண்டர்கள்.. ஜார்கண்ட் தேர்தலுக்கு பாஜக அள்ளி வீசிய வாக்குறுதிகள்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச கேஸ் சிலிண்டர் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல்: வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு பாஜக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கல்ப் பத்திரம் என்ற பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
பாஜக மற்ற அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தனித்து நிற்கிறது என்று குறிப்பிட்ட அமித் ஷா, நடைபெறும் சட்டசபைத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை என்றும் இது ஜார்கண்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குறுதிகள்: தொடர்ந்து தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய அமித் ஷா, "கோகோ தீதி (Gogo Didi) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும். தீபாவளி மற்றும் ரக்ஷாபந்தன் தினங்களில் இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ரூ. 500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜார்கண்ட் இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜார்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். ஆனால், பழங்குடியினருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது" என்றார்.
பொது சிவில் சட்டம்: அவர் மேலும் கூறுகையில், "ஊழல் நிறைந்த ஆட்சி வேண்டுமா இல்லை வளர்ச்சி தரும் பிரதமர் மோடியின் பாஜக ஆட்சி வேண்டுமா என்பதை ஜார்க்கண்ட் மக்கள் முடிவு செய்ய வேண்டும். அந்நியர்களின் ஊடுருவலை அனுமதிப்பதன் மூலம் ஜார்க்கண்டின் அடையாளம், நிலம் மற்றும் பெண்களை ஆபத்தில் தள்ளும் அரசு வேண்டுமா அல்லது எல்லைகளைப் பாதுகாக்கும் பாஜக அரசு வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
குறிப்பாக சந்தால் பர்கானாவில் பழங்குடியினரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் இங்கு வந்து எங்கள் பெண் பிள்ளைகளை ஏமாற்றி திருமணம் செய்து நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இதைத் தடுக்கவில்லை என்றால் ஜார்கண்ட் கலாச்சாரம் மகள்கள் இல்லாமல் போவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த ஊடுருவல்காரர்களை நாங்கள் விரட்டுவோம். இதற்கான தனிச் சட்டம் கொண்டு வந்து பெண்களிடம் இருந்து பறித்த நிலத்தைத் திருப்பி கொடுப்போம். ஹேமந்த் சோரன் அரசு ஜார்கண்ட் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
ஜார்கண்ட் தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சீட்கள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக நவ. 13 மற்றும் நவ. 20 ஆகிய வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அங்கு மொத்தம் 81 சீட்கள் இருக்கும் நிலையில், 41 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.












Click it and Unblock the Notifications