தப்புமா ஜார்கண்ட் அரசு? திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி
ராஞ்சி: புதிதாக ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுள்ள சம்பாய் சோரன் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநிலச் சட்டசபையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது.

அவருக்குப் பிறகு அவரது மனைவி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வர்: அவர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய போதிலும், உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. பல மணி நேரம் கழித்து வியாழக்கிழமை நள்ளிரவில் தான் ஜார்கண்ட் ஆளுநர் சம்பாய் சோரன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். மேலும், சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாட்கள் கால அவகாசமும் கொடுத்தார்.
ரிசார்ட் அரசியல்: இதற்கிடையே ஜார்கண்ட் புதிய முதல்வர் சம்பாய் சோரன், திங்கள்கிழமை சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதன் காரணமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசைச் சேர்ந்த சுமார் 40 எம்எல்ஏக்கள் நம்பிக்கை இப்போது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள ரிசார்ட்டில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் குதிரை பேரத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை அடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜார்கண்ட் பொறுத்தவரை அங்கே மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ள. அதில் ஒரு இடம் காலியாக இருப்பதால் இப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆளும் ஹேமந்த் சோரன் கூட்டணி அரசுக்கு 48 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. எனவே தான் எம்எல்ஏக்கள் இப்போது ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சரியாக எத்தனை பேர் ஹைதராபாத்தில் உள்ளனர் என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை.
காங்கிரஸ் தலைவர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒரு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, தனது கட்சியில் மற்றொருவருக்கு ஆட்சியை ஒப்படைப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது..
ஆனால், நாங்கள் அதைச் செய்துள்ளோம். ஒட்டுமொத்த கூட்டணியும் ஒருமனதாக ஹேமந்த் சோரனுக்கு பிறகு சம்பாய் சோரன் முதல்வராகச் செயல்படுவர் என்று தேர்வு செய்தோம். அடுத்து அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார். பிப்ரவரி 5-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அதுவரை எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
ஹேமந்த் சோரன்: இதற்கிடையே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இப்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனும் கலந்து கொள்கிறார். ஜார்கண்ட் சட்டசபையில் பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், அதில் பங்கேற்க ஹேம்ந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அவர் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சம்பாய் சோரன் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் மட்டும் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications