இன்று தமிழ்நாடு பந்த்: கன்னடர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. ஜெ.க்கு சித்தராமையா கடிதம் #cauvery
பெங்களூர்: இன்று நடைபெறும் தமிழக பந்த்தின்போது தமிழ்நாட்டிலுள்ள கன்னடர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் சொத்துக்கள் மீதும், தமிழக லாரி டிரைவர்கள் மீதும் கர்நாடகாவில் நடைபெற்ற தாக்குதல்களை கண்டித்து தமிழகத்தில் இன்று பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

துரதிருஷ்டவசமாக வன்முறை
கடந்த 12ம் தேதி உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், கன்னடர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால் அது எங்கள் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என கூறியிருந்தேன். துரதிருஷ்டவசமாக, என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், 12ம் தேதி இங்கு வன்முறை வெடித்தது.

கட்டுக்குள் வன்முறை
இருப்பினும், சில மணி நேரங்களுக்குள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தோம். வன்முறையாளர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வன்முறை பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மீண்டும் இதுபோல சம்பவம் நடைபெறக் கூடாது என சட்டம் ஒழுங்கு துறைக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளேன்.

பந்த்தால் பலனில்லையாம்
காவிரி விவகாரம் கோர்ட் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றின் பார்வையில் உள்ள நிலையில், போராட்டம், பந்த்துகளால் எந்த பயனும் ஏற்படாது. இந்த நிலையில்தான், இன்று தமிழகத்தில் சில அமைப்புகள் பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளது குறித்து அறிந்தேன். இரு மாநிலங்களுக்குமே நட்புறவை பேணுவதில் சம பங்கு உள்ளது என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என கருதுகிறேன்.

கன்னடர்களுக்கு பாதுகாப்பு
எனவே இன்று தமிழகத்தில் நடைபெறும் பந்த்தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உங்களிடம் கோரிக்கைவிடுக்கிறேன். தமிழகத்திலுள்ள கன்னட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அதிகாரிகள் தயார்
காவிரி விவகாரங்களில் வன்முறையை தூண்டக்கூடாது என கர்நாடக மீடியாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல, நீங்களும் உங்கள் மாநில மீடியாக்களுக்கு கடிவாளம் போட வேண்டும். கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபியை தமிழக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க உத்தரவிட்டுள்ளேன். உங்கள் அதிகாரிகளை இதற்கு ஒத்துழைப்பு தர உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் செய்யவில்லையே..
காவிரி விவகாரத்திற்காக கர்நாடகாவில் பந்த்துக்கு அழைப்புவிடுத்தபோது, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக முதல்வர் இதுபோன்ற ஒரு கடிதத்தை சித்தராமையாவுக்கு எழுதி அவரை வலியுறுத்தவில்லை. தமிழக அதிகாரிகளையும் உதவிக்கு அனுப்பவில்லை. பெங்களூரில் வன்முறை வெடித்து பல கோடி பொருட்கள் சேதமான பிறகு ஜெயலலிதா தரப்பிலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டு தமிழர் நலன் காக்க கோரிக்கைவிடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications