ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கியது கர்நாடகா!

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக கர்நாடக அரசு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மாநில அரசு நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, நேற்று இரவே பவானி சிங்கை கர்நாடக அரசு அதிரடியாக நீக்கிவிட்டது..
இதனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது பவானிசிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications