கர்நாடகா ஹனிடிராப் விவகாரம்..சுதந்திரமான விசாரணை நடத்த கோரிய மனுவை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
டெல்லி: கர்நாடகாவை அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஹனிடிராப் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது. கர்நாடகா சட்டசபையில் ஹனிடிராப் விவகாரத்தை அமைச்சர் ராஜண்ணா எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநில சட்டசபையில் பேசிய அமைச்சர் ராஜண்ணா, ஹனிடிராப் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடந்தது. இதுவரை 48 பேர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஹனிடிராப் குறித்து விசாரிக்க வேண்டும் என்றார். பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யத்னாலும் ஹனிடிராப் குறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் பரமேஸ்வரா, ஹனிடிராப் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும் என்றார். இருந்த போதும் அமைச்சர் ராஜண்ணா இதுவரை போலீசில் புகார் தரவில்லை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கர்நாடகா சட்டசபையில் அமைச்சர் ராஜண்ணா பேசியதை மேற்கோள்காட்டி, இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, முறையாக மனுத் தாக்கல் செய்தால் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றார் தலைமை நீதிபதி. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications