நீடித்த இருமலால் அவதிப்படும் கேஜ்ரிவால்! பெங்களூர் டாக்டரிடம் காட்ட அட்வைஸ் செய்த பிரதமர் மோடி!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நீடித்த இருமலால் அவதிப்படுவதைப் பார்த்த பிரதமர் மோடி பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் நாகேந்திராவிடம் காட்டுமாறு ஆலோசனை கூறியிருக்கிறார்.
டெல்லியில் போலீஸ் கமிஷனர் பாசி நேற்று தேனீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.

ஏற்கெனவே காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கேஜ்ரிவால் நேற்றைய நிகழ்ச்சியின் போதும் இயல்பாக இருக்க முடியாத நிலையில் அமர்ந்திருந்தார். அப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கேஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் கேஜ்ரிவாலுக்கு இந்த பிரச்சனை எவ்வளவு காலமாக இருக்கிறது என்றார். ஆனால் கேஜ்ரிவால் சற்றே அமைதியாக இருந்த நேரத்தில் 'துணை முதல்வர்' மணிஷ் சிசோடியா, எனக்கு தெரிந்த வரை 12 முதல் 15 ஆண்டுகாலம் இந்த பிரச்சனை இவருக்கு இருக்கிறது என்றார்.
அதே நேரத்தில் கேஜ்ரிவாலோ "முன்னைப் போல இல்லை... தூசி மற்றும் காலநிலையில் ஏற்படுகிற மாற்றத்தால் மீண்டும் மீண்டும் வந்துவிடுகிறது" என்றார்.
அப்போது பிரதமர் மோடி, பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் நாகேந்திரா இதில் ஸ்பெஷலிஸ்ட்.. நீடித்த இருமலை அவர் விரைவாக குணப்படுத்திவிடுவார்... அவரை சந்தியுங்கள் என்றார். பிரதமரின் ஆலோசனையை அமைதியாக புன்னகைத்தவாறே ஆமோதித்தார் கேஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications