"ரத்தக் குடிக்கும் நரி" - கேரள அரசை கலைக்க பரிந்துரைத்த ஆளுநர் சதாசிவம் மீது காங். பாய்ச்சல்!!
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறை சம்பவம், 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உள்ளது என ஆளுநர் சதாசிவம் பகிரங்க அறிக்கை வெளியிட்டதால், கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மது பார்களை திறக்க உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது புகார் எழுந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கிடையே கடந்த 13ஆம் தேதி கேரள சட்டசபையில் அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

எதிர்கட்சிகள் ரகளை
இதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரை சட்டசபைக்குள் நுழைய விடாமல் அவரது இருக்கையை சூறையாடினர். பேரவை வளாகத்திலும் கலவரம் நடந்தது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் சதாசிவம் அறிக்கை
இது தொடர்பாக, ஆளுநர் சதாசிவம் நேற்று முன்தினம் இரவு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பட்ஜெட் தினத்தன்று கேரள சட்டசபையில் நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட எம்எல்ஏக்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியை கலைக்க சிபாரிசு
அரசியலமைப்பு சட்டம் 356வது பிரிவின் கீழ் நடவடிக்கை (ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய) எடுக்க குடியரசுத்தலைவருக்கு சிபாரிசு செய்யும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது. சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் எனக்கு அளித்த அறிக்கைகள், வீடியோ காட்சிகள், பத்திரிகை செய்திகளை நான் விரிவாக ஆய்வு செய்தேன்.

அரசுக்கு நெருக்கடி
எதிர்க்கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கூட மரியாதை குறைவாக நடந்து கொண்டுள்ளனர். வரும் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் மீதான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லா விட்டால் அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும். இவ்வாறு ஆளுநர் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் கருத்து
இதனிடையே ஆளுநரின் அறிக்கை தொடர்பாக கருத்து கூறியுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, கேரள சட்டசபையில் நடந்த வன்முறை சம்பவங்கள் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிக மோசமான சம்பவம் ஆகும். இது நிதியமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தொடர் சம்பவங்கள் ஆகும்.

நடவடிக்கை என்ன?
இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. இதுதொடர்பாக ஆளுநர் சதாசிவம், ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.

சிக்கல் இல்லை
கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி கூறுகையில், கேரளாவில் அரசு என்று ஒன்று இருந்தால்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து அதை நிறைவேற்றவும் முடியும். கேரளா அரசில் இப்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை. எனவே 356வது பிரிவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ரத்தம் குடிக்கும் நரி
கேரள அரசு தலைமை கொறடா பி.சி. ஜார்ஜ், ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநிலங்களுக்கு ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை. 2 ஆடுகள் முட்டி மோதும் போது நடுவில் வந்து ரத்தம் குடிக்கும் நரியை போல ஆளுநர் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்ப்போம்
பட்ஜெட் தினத்தன்று சட்டசபையில் நடந்த சம்பவங்கள் மிகவும் மோசமானதாகும். ஆனால் அதற்காக கேரள அரசுக்கு எதிராக 356 பிரிவை பயன்படுத்த முயற்சிப்பது ஏற்று கொள்ள முடியாது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications