அடப்பாவி.. அங்கேயுமா கேமரா? பொல்லாத வேலை பார்த்த போலீஸ்! காவல்நிலைய கழிவறையில் ’மூன்றாம் கண்’
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே வண்டிப்பெரியார் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி பெண் காவலர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த காவலரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கழிவறையில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து பெண் காவலர்களை அந்த காவலர் உல்லாசத்திற்கு அழைத்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லை என்ற சூழல் தான் நிலவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதே போல பிரபல துணிக்கடை ஒன்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக காவல் நிலையத்திலேயே கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி பெண் காவலர்களை வீடியோ எடுத்து இருக்கிறார் காவலர் ஒருவர். இடுக்கி அருகே வண்டிப்பெரியார் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் வண்டிப்பெரியார் மகளிர் காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் வண்டிப்பெரியார் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்களுக்காக கழிவறைக்கு செல்லவும் உடைகள் மாற்றவும் ஒரு கழிவறை இருக்கிறது. அங்கு நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு பெண் போலீசார் உடைமாற்றும் காட்சிகளை ரகசியமாக ஒருவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த காட்சிகளை எனக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டுகிறார். தன்னை மட்டுமல்ல பல பெண் போலீசாரையும் இதே போல அவர் மிரட்டி வருகிறார், அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சைபர் கிரைம் போலீசாருக்கு இந்த வழக்கை ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேமராக்களை வைத்தது அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயதான வைசாக் என்பது தெரியவந்தது. வைசாக்கின் வீடு கழிவறைக்கு அருகே இருக்கும் நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் கேமராக்கள் பொருத்தியது தெரிய வந்தது.
மேலும் அதனை தனது செல்போனில் இணைத்து கடந்த ஏழு மாதங்களாக பெண் போலீசார் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து இருக்கிறார். மேலும் அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண் போலீசாருக்கு அனுப்பி தனக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லை என்றால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி உள்ளார். சில பெண் போலீசார் அவரது ஆசைக்கு இணங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து வைசாக்கை கைது செய்த போலீசார் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான பெண் போலீசார் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்தது. தொடர்ந்து வைசாக்கும் தான் செய்த குற்றத்தையும் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோல பல பெண்களிடம் வைசாக் அத்துமீறி இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் பெண் காவலர்களையே வீடியோ எடுத்து காவலர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரளா போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications