கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்.. அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மீண்டும், மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, நேற்று முன்தினம், மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

பலி எண்ணிக்கை உயர்வு
இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

முல்லை பெரியாறு அணை நிலவரம்
முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திறக்கப்பட்டுள்ள இடுக்கி அணை
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளபோதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீட்பு பணியில் ராணுவம்
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வயநாடு, கோழிக்கோட்டில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 24 அணைகளில் இருந்தும் உபரிநீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வேண்டுகோள்
கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் யாரும் அந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது போல் கேரளாவுக்கு யாரும் சுற்றுலா பயணிகள், வெளிமாவட்ட தோட்ட தொழிலாளர்கள் வர வேண்டாம் என்றும் கேரள அரசு கேட்டு கொண்டுள்ளது. கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை போடப்பட்டது.

உடைய வைக்கும் காட்சிகள்
இந்த வெள்ளம் குறித்து மனதை உடைய வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

பெரிய அழிவு
கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

முதல்வர் வருத்தம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications