பாஜகவுக்கு தனியா கொள்கை எல்லாம் இல்லை.. எங்க வாக்குறுதிகளை கூட காப்பியடித்துள்ளனர்.. விளாசிய கார்கே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பாஜகவுக்கு என எந்த கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக காங்கிரஸின் வாக்குறுதிகளை காப்பியடிக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

எனவே காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பரத்பூர் மாவட்டத்தின் வயர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பாஜகவுக்கு என எந்த கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக காங்கிரஸின் வாக்குறுதிகளை காப்பியடிக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது, "பாஜகவும், பிரதமர் மோடியும் வேறு வழியின்றி காங்கிரஸின் வாக்குறுதிகளை அப்படியே காப்பியடித்துள்ளனர். பாஜகவுக்கு எந்த நோக்கமும் கொள்கையும் கிடையாது. பிற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் திட்டங்களை அப்படியே காப்பியடித்து தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக அது வழங்கி வருகிறது. பல முயற்சிகளுக்கு பின்னர் இந்த காப்பியடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் யதார்த்தத்தில் காங்கிரஸ்தான் மக்களுக்காக உழைக்கிறது. அதை ராஜஸ்தான் மக்களும் நன்கு அறிவார்கள். இந்த முறை நாங்கள் கொடுத்திருக்கும் உத்தரவாதங்கள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்" என உறுதியளித்துள்ளார். அதேபோல #Congress_again என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
என்னதான் காங்கிரஸ் வலுவான பிரசாரத்தை மேற்கொண்டிருந்தாலும், முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயுள்ள மோதல் போக்கு கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது சமீபத்தில் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸில் சீட் மறுக்கப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications