கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. பணம் தேவையில்லை.. நியாயம்தான் தேவை.. இழப்பீட்டை நிராகரித்த தந்தை
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெண் மருத்துவரின் தந்தை வாங்க மறுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். முழு செயல்முறையும் வீடியோ மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின்போது அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் உடனிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை கொலை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள பெண் மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார். இந்தப் பணத்தை நான் பெற்றுக் கொண்டால் அது எனது மகளுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும். இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனக்கு இழப்பீடு தேவையில்லை. நியாயம்தான் தேவை என்று கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மருத்துவரின் தந்தை கூறுகையில், எங்களுடன் துணையாக நிற்கும் அனைவரையும் நான் எனது மகள், மகனாகதான் பார்க்கிறேன். மாநில அரசு வழங்கிய இழப்பீட்டை நிராகரித்துவிட்டேன். அந்தப் பணத்தை நான் பெற்றுக் கொண்டால் அது என்னுடைய மகளுக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தும். எனக்கு நியாயம்தான் வேண்டும். சிபிஐ அதிகாரிகள் எங்களது குடும்பத்தினரின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். குற்றவாளியை விரைவாக கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications