பலாத்காரம் செய்யப்பட்ட கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கழுத்து, மார்பு பகுதிகளில் காயம்! பாஜக ஆவேசம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் ஜூன் 25-ம் தேதி 24 வயது சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், மருத்துவப் பரிசோதனையில் உடல் ரீதியான தாக்குதல் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கழுத்து மற்றும் மார்பில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை NDTV பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பு அல்லது வாய்வழி காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், தடயவியல் அறிக்கை வந்த பிறகே பாலியல் வன்கொடுமை நடந்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 26-ம் தேதி இரவு 10 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியில் இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக மூன்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு
சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறையின் உதவி ஆணையர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நான்கு பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக சவுத் கல்கத்தா சட்டக் கல்லூரியில் காவலாளியாகப் பணிபுரியும் நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை உறுதிப்படுத்தியது. காவலாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்தின்போது அவர் வளாகத்தில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் உறுதி செய்துள்ளன.
இந்த கைது நடவடிக்கையின் மூலம், காவலாளி, கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய மனோஜித் மிஸ்ரா மற்றும் இரண்டு தற்போதைய மாணவர்கள் உட்பட இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலாளியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பிறகு, காவலாளியின் அறையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த காவலாளியின் அறை மற்றும் அருகிலுள்ள மாணவர் சங்க அலுவலகம் ஆகியவை காவல்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்
பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், ஆளும் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமுல் சத்ரா பரிஷத் (TMCP) கூட்டம் முடிந்த உடனேயே தான் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். சுமார் இரவு 7:30 மணியளவில் மூன்று பேர் தன்னை சூழ்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களில் இருவர் தன்னை ஒரு அறையில் பூட்டினர். பின்னர் அந்த அறையில் இருந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அவர் கூறியுள்ளார். தான் எவ்வளவோ கெஞ்சியும், எதிர்த்தும் அவர் கேட்கவில்லை என்றும், தன்னை வலுக்கட்டாயமாக ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்ற இருவரும் வெளியே நின்று காவல் காத்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் தனது காதலன் மற்றும் குடும்பத்தினரை விடமாட்டோம் என்று மிரட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள், எனக்கு காதலன் இருக்கிறார் என்று கூறினேன். ஆனால் பாலியல் குற்றவாளி அதை காதுகொடுத்து கேட்கவில்லை. நான் அவரது கால்களை தொட்டு வணங்கி என்னை விட்டு விடுமாறு கெஞ்சினேன்" என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், அந்த சம்பவத்தின்போது தனக்கு பதட்டமான மனநிலை ஏற்பட்டதாகவும், அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனக்கு இன்ஹேலர் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இன்ஹேலரை பயன்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆனால் மீண்டும் பிடிபட்டதாகவும், பின்னர் காவலாளியின் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது புகாரின்படி, தாக்குதலின்போது ஹாக்கி ஸ்டிக்கால் தலையில் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரவு 10:50 மணியளவில் தன்னை விடுவித்ததாகவும், ஆனால் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மீண்டும் எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.
அரசியல் சர்ச்சை

இந்த சம்பவம் ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ராவை ஆளும் TMC கட்சி பாதுகாப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மிஸ்ரா இதற்கு முன்பு கல்லூரியின் TMCP பிரிவில் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும், லோக்சபா எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த TMC தலைவர்களுடன் மிஸ்ரா இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மிஸ்ரா இதற்கு முன்பு தங்கள் மாணவர் பிரிவுடன் தொடர்பில் இருந்தார் என்பதை TMC ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவரிடமிருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications