உச்சகட்ட பரபரப்பில் கொல்கத்தா.. இன்று மாநகராட்சி தேர்தல்.. 144 வார்டுகளில் தொடங்கிய வாக்குப்பதிவு
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் 144 வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
சட்டமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பவானிபூர் இடைத்தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கம் இன்று மற்றுமொரு தேர்தலை சந்திக்க உள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொல்கத்தா மாநகராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 144 வார்டுகளை கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் 2010ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பலத்த பதுகாப்பு
ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மாநில காவல் துறையின் பொறுப்பின் கீழ் நடைபெறும் என கூறி பாஜகவின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று சுமார் 23 ஆயிரம் போலீசார் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது
144 வார்டுகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தங்கும் விடுதிகள் மற்றும் நகரின் நுழைவு பகுதிகளில் கடுமையான சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

கண்காணிப்பு பணியில் போலீசார்
வாக்கு எண்ணிக்கை மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் மநாகராட்சிப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம், பாதுகாப்புப் படை அதிகாரிகள் பெருநகரத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு புதிதாக வந்த விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் வரவிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை குறித்து கண்காணித்து வருகின்றனர். தேர்தல் முற்றிலுமாக பாதுகாப்புடன் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்றும் , அதற்காக கொல்கத்தா, சால்ட் லேக், ஹவுரா மற்றும் வடக்கு தெற்கு பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?
சட்டமன்றத் தேர்தலில் கொல்கத்தாவில் உள்ள 17 விதான் சபா இடங்களையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்றது மட்டுமல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கொல்கத்தா நகரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாஜகவும் சற்று அழுத்தம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications