மத்திய பாஜக அரசுக்கு எதிராக உறைபனியில் போராடும் லடாக்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு-கடைகள் மூடல்- ஏன்?
லே: மத்திய பாஜக அரசுக்கு எதிராக லடாக் யூனியன் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு அங்கமாக லடாக் இருந்து வந்தது. ஆனால் 2019-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 371-வது பிரிவு வழங்கிய சிறப்பு அந்தஸ்து மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் துண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது சட்டசபையை கொண்டது; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையும் கிடையாது எனவும் மத்திய பாஜக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி லே, கார்கில் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. லடாக் தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி லே, கார்கில் மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.

இது தொடர்பாக லடாக் போராட்ட குழுவினர் கூறுகையில், எங்களுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மாநிலத்துக்கு சட்டசபையை உருவாக்க வேண்டும். லடாக் தனி மாநிலத்தை பழங்குடிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அரசியல் சாசனத்தின் 6-வது பிரிவில் இணைக்க வேண்டும். அத்துடன் லே, கார்கில் ஆகிய மாவட்டங்களை 2 லோக்சபா தொகுதிகளாகவும் அறிவித்து லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியே முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.
#WATCH | Leh, Ladakh: Thousands brave the freezing cold as they march demanding statehood for Ladakh and protections under the 6th Schedule of the Constitution for the Union Territory. (03.02) pic.twitter.com/gwsiGZBxXc
— ANI (@ANI) February 4, 2024
லே-வில் உள்ள போலோ மைதானத்தில் கடும் குளிர், உறைபனியையும் பொருட்படுத்தாமல் வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு லடாக் தனி மாநில அந்தஸ்து கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் லே சலோ என முழக்கமிட்டனர். சிலர் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் மாநில அந்தஸ்து கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் லடாக் பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications