லடாக் வன்முறைக்கு.. காரணமாக உருவெடுத்த சோனம் வாங்சுக்.. யார் இவர்? பின்னணி என்ன?
லடாக்: இந்தியாவின் "ரத்தின மகுடம்" என்று வர்ணிக்கப்படும் லடாக் இயற்கை எழில் பொருந்தியது. அழகான கோவில்கள், மடாலயங்கள், மசூதிகள், மலைகள், சுற்றுலா தலங்கள் என்று திரும்பும் இடம் எல்லாம் எழில் கொஞ்சும் அழகு கொண்டது. ஆனால் அதே லடாக் தற்போது வன்முறையால் சீர்குலைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வன்முறைகள். கலவரங்கள் என்று கொதிப்பான சூழல் அங்கே நிலவி வருகிறது. இந்த கலவரங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. அதில் முதன்மை காரணம் சோனம் வாங்சுக்!
காலநிலை மாற்றப் போராளியாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்ட நபர் சோனம் வாங்சுக். இதே சோனம் வாங்சுக் தற்போது அங்கே கலவரம் நடப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டார். சோனம் வாங்சுக் தற்போது கைது செய்யப்பட்டு, அமைதியின்மையை தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லடாக்கின் லே நகரில் செப்டம்பர் 24 அன்று நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்... அப்படி சோனம் வாங்சுக் என்ன பேசினார்? லடாக்கில் என்னதான் நடக்கிறது?

லடாக் லே எரிந்த நாள்
செப்டம்பர் 24 அன்று லே முழுக்க பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, லடாக் சட்டசபை இல்லாத ஒன்றியம் பிரதேசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும் லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
முதலில் லடாக்கில் முழு அடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த முழு அடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக.. கைமீறி போய் அப்படியே போராட்டமாக மாறி கலவரத்தில் முடிந்தது. போராட்டத்திற்கு வந்த கூட்டத்தினர் பலர் மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களைத் தாக்கி, வாகனங்களுக்குத் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் உடனுடன் சண்டைக்கு சென்றனர்.
இந்தக் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய அரசின் சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டது. கலவர கும்பல் காவல் நிலையங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை குறிவைத்ததால், நிர்வாகம் ஊரடங்கை விதித்தது.
மத்திய அரசு அதிகாரிகள், இது ஒரு தன்னிச்சையான போராட்டம் அல்ல, ஆனால் இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம். மக்கள் தன்னெழுச்சியாக போராடவில்லை. திட்டமிட்டு இந்த கலவரத்தை நடத்தி உள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த வன்முறைக்குச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.. சோனம் வாங்சுக் வன்முறை தூண்டும் வகையில் வகையில் பேசியதாகவும் அதுவே வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வாங்சுக்கின் மாறும் முகம்
சோனம் வாங்சுக் சினிமா வழியாகவே பிரபலம் அடைந்தார். த்ரீ இடியட்ஸ் படம்.. அதாவது தமிழில் நண்பன் படத்தில் வரக்கூடிய கொசக்சி பசப்புகள் (விஜய்) பாத்திரம் சோனம் வாங்சுக்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பாத்திரம் ஆகும். த்ரீ இடியட்ஸ் வழியாக இவர் நாடு முழுக்க கவனம் பெற்றார். உலகளாவிய சுற்றுச்சூழல் விருதுகளைப் பெற்றது தொடங்கி பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது வரை பல காரணங்களால் இவர் கவனம் பெற்றார்.
2019 இல் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டபோது, வாங்சுக் இந்த நடவடிக்கையைக் கொண்டாடினார். அப்போது அவர் இந்த முடிவை பாராட்டி இருந்தார். "நன்றி பிரதமர் மோடி @narendramodi @PMOIndia க்கு லடாக்கின் நீண்டகால கனவை நிறைவேற்றியதற்காக நன்றி. 1989 ஆகஸ்டில் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு லடாக் தலைவர்கள் UT அந்தஸ்துக்காக இயக்கத்தைத் தொடங்கினர். இப்போது பல காலம் கடந்து அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதற்கு நன்றி," என்று கூறி இருந்தார்.
அந்த நன்றியுணர்வு, தற்போது மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் மற்றும் துரோகக் குற்றச்சாட்டுகளால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை, விமர்சகர்கள் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆதரவாளர்கள் இது லடாக்கின் வளரும் தேவைகளைப் பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்துகின்றனர்.
பியாங் நிலத்தகராறு - சோனம் வாங்சுக் கோபத்திற்கு காரணம்.
சோனம் வாங்சுக் இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்ற காரணம் பியாங் நிலத்தகராறுதான் என்கிறார்கள் சிலர்.
லடாக் நிர்வாகம் வாங்சுக்கின் திட்டம் ஒன்றை ரத்து செய்தது தான் அவரின் கோபத்திற்கு என்கின்றனர். இமயமலை மாற்று கற்றல் நிறுவனத்திற்காக (HIAL) என்ற கல்வி அமைப்பை சோனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பியாங்கில் உள்ள 135 ஏக்கர் நிலத்தில், இமயமலை மாற்று கற்றல் நிறுவனத்திற்காக (HIAL) 2018 இல் ஒதுக்கப்பட்ட 40 வருட குத்தகையை சமீபத்தில் லே துணை ஆணையர் ரத்து செய்தார்.
அதிகாரபூர்வ உத்தரவில், சோனம் நடத்தும் இந்த நிறுவனம் ஆறு வருடங்களாக அங்கே எந்த பணிகளையும் செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் அங்கே நடக்கவில்லை. இதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று கூறினார். மேலும் கோடிக்கணக்கான குத்தகை கட்டணங்கள் செலுத்தப்படவில்லை. கிராம மக்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று கூறினார்.
அந்த தீர்ப்பில், குத்தகை காலாவதியாகிவிட்டது என்றும், நிலுவைத் தொகைகள் உடனே கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நிலம் அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. வாங்சுக் இந்த முடிவை ஒரு அரசியல் குறிவைப்பாகக் கருதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து அவர் 35 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், தனது போராட்டத்தை தனது நிறுவனத்தினர்கான போராட்டம் என்று மட்டும் சொல்லாமல் லடாக்கில் மாநில அந்தஸ்திற்கான போராட்டம் என்றும் கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டம் அப்படியே லடாக்கில் மாநில அந்தஸ்திற்கான போராட்டமாக மாறியது. அதுவே பின்னர் அங்கே கலவரம் ஏற்படவும் காரணமாக மாறியது.

FCRA ரத்து மற்றும் நிதி தொடர்பான கேள்விகள்
இதை தொடர்ந்து லடாக்கின் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் (Students Educational and Cultural Movement of Ladakh) என்ற அவரது அமைப்பு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் (FCRA) உரிமத்தை இழந்தது. நிதி பெற்றதில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக கூறி அந்த உரிமை நீக்கப்பட்டது.
அந்த நிறுவனம் நிதி முறைகேடு, ஒழுங்கற்ற நிதி அறிக்கை மற்றும் உரிமத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளுக்குப் பணத்தைப் பயன்படுத்தியதாகக் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அவரது நிதி செயல்பாடுகள் குறித்த கேள்விகள் நீண்ட காலத்திற்கு முன்பே எழுந்தது. 2007 ஆம் ஆண்டிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியின் போது, லே துணை ஆணையர் சோனம் நடத்தும் அந்த அமைப்பு வெளிநாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அனுமதி இல்லாமல் 200 அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், ஹில் கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
இப்போது சீனா உட்பட வெளிநாடுகளுடனான அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. சோனம் வாங்சுக் மீது ஏற்கனவே பல புகார்கள், விமர்சனங்கள் இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
சோனம் வாங்சுக் - உண்ணாவிரதத்திலிருந்து கைது வரை
வாங்சுக்கின் உண்ணாவிரதம் பரவலான கவனத்தை ஈர்த்தது. 0 டிகிரிக்கும் குறைவான லடாக் வெப்பநிலையில் போர்வைகளால் போர்த்தப்பட்ட அவரது படங்கள் இணையத்தில் டிரெண்டாகின. அரசு அலட்சியத்திற்கு எதிராகப் போராடும் தனிப் போராளியாக அவரின் புகைப்படங்கள் பரப்பப்பட்டன. அவரே தனது கைது குறித்து கணித்து, "சோனம் வாங்சுக் சிறையில் இருப்பது, வெளியே இருப்பதைக் காட்டிலும் அரசுக்கு மிகவும் ஆபத்தானது" என்று கூறினார்.
லே-யில் போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது, நிர்வாகம் விரைவாக செயல்பட்டு போராட்டத்தை கட்டுப்படுத்துகிறது. செப்டம்பர் 25 அன்று, வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது அங்கே நிலைமையை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது.
சோனம் வாங்சுக் - அரசியல் உள்நோக்கம்
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மேலும் அரசியலாக்கியது. எதிர்க்கட்சிகள், அவர்கள் சார்ந்த குழுக்கள், சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த விவகாரத்தை பூதாகரமாக பரப்பி, வாங்சுக்கை ஒரு நவீன காந்தியாக, போராளியாக சித்தரித்தன. ஆன்லைன் பிரச்சாரங்கள் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக நடத்தப்பட்டன.
இந்த போராட்டங்கள் இயற்கையாக மக்கள் எழுச்சியாக நடப்பதா அல்லது திட்டமிட்டு தூண்டப்பட்டு நடந்த போராட்டங்களாக என்ற கேள்வியையும் இது எழுப்பியது. முக்கியமாக எல்லை பகுதியின் பாதுகாப்பை சீர்குலைக்கும் விதமாக இந்த போராட்டம் நடந்ததா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்திய பாதுகாப்பிற்கான சவால்கள்
லடாக் பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு மிகவும் முக்கியம். இது சீனாவை ஒட்டியுள்ளது, நவீன தொழில்துறைக்கு அவசியமான அரிய பூமித் தாதுக்களின் இருப்புக்களைக் கொண்டுள்ளது, மேலும் முக்கியமான இந்திய ராணுவப் பிரிவுகளுக்கு இடமளிக்கிறது. இங்கு நீண்ட கால அமைதியின்மை உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்ட அபாயங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கே இது சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அரபு வசந்தம், இலங்கையின் மக்கள் போராட்டம் மற்றும் வங்கதேசத்தின் வன்முறைகள் குறித்த வாங்சுக் பேச்சுக்கள் கடும் சந்தேகங்களை, கவலைகளை ஏற்படுத்தி உள்ளன. அவர் ஏதும் திட்டத்துடன் செயல்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அவர் திட்டமிட்டு செயல்படுகிறாரோ என்றும் விமர்சகர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.
பெரிய கேள்வி
வாங்சுக் சம்பவம் ஒரு தனி மனிதனின் போராட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது லடாக்கின் அரசியல் எதிர்காலம், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு என்று பல விஷயங்களை பாதுகாக்க கூடியது. இந்த போராட்டங்களால் நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன, பல பேர் காயமடைந்துள்ளனர். லடாக்கில் அமைதி இன்மைக்கு காரணமாக வாங்சுக் அமைந்துவிட்டார்.
அவரது பேச்சு வன்முறை தூண்டும் வகையிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது போல இருந்ததாகக் கூறப்பட்டது. நேபாளத்தில் ஜென் Z போராட்டங்கள் பற்றிய வாங்சுக்கின் பேச்சுகள் மக்களிடையே கோபத்தைத் தூண்டியதாக உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது.
போராட்டங்கள் மற்றும் முழு அடைப்பின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்கள் லே, லடாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லடாக்கில் நடந்த கலவரம் பல விதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications