லலித் மோடி லண்டனுக்கு தப்பிச் செல்ல உதவியதே வசுந்தரா ராஜேதானாம்!
லண்டன்: ஊழல் புகாரில் தேடப்படும் குற்றவாளியான ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, லண்டனுக்குத் தப்பிச் செல்ல பெரும் உதவி செய்ததே ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜேதான் என்ற உண்மை வெளியாகியுள்ளது.
இதனை லலித் மோடியே இப்போது கூறியுள்ளதால் வசுந்தரா ராஜேவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லலித் மோடி, கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிட்டனில் குடியேறுவதற்கு, அப்போது ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே உதவியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பிரிட்டன் அரசுக்கு அவர் எழுதியதாகக் கூறப்படும் 3 பக்க ஆவணம் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், தனது பெயரை இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வசுந்தரா ராஜே கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த ஆவணத்தை லலித் மோடியின் சட்ட ஆலோசனைக் குழு ஊடகங்களுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அந்த ஆவணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை கூறினார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'லலித் மோடியின் குடும்பத்தினரை எனக்கு நன்கு தெரியும்; இருப்பினும், ஊடகங்கள் எந்த ஆவணம் குறித்துப் பேசுகின்றன என எனக்குத் தெரியாது' என்றார்.
அதே நேரம், சுஷ்மா, வசுந்தரா இருவரும் தனக்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளதாக பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியாகவே அளித்துவிட்டார் லலித் மோடி.
அவர் அளித்த அந்த பேட்டியில், "சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் தனது நீண்ட கால குடும்ப நண்பர்கள். 20 ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முறைகேடு புகார்களில் என்னைச் சிக்க வைத்தது. அந்தச் சூழ்நிலையில், எனது மனைவியின் சிகிச்சைக்காக, சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரிடம் உதவி கோரினேன்.
நான் பிரிட்டனில் குடியேற வசுந்தரா ராஜே எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்து உதவி செய்தார். என் மனைவி சிகிச்சைக்காக போர்ச்சுகலில் இருந்தபோது, வசுந்தராவும் உடனிருந்தார். சுஷ்மா ஸ்வராஜையும், அவரது குடும்பத்தினரையும் எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்," என்றார்.
ஆக, லலித் மோடியைத் தப்ப வைப்பதில், ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவருக்கு உதவுவதில் பாஜக தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டுள்ளதை லலித் மோடியே அம்பலப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications