ஜம்மு காஷ்மீர்: பாஜகவுக்கு ஷாக்! காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்..மீண்டும் அடித்துச் சொல்லும் Lok Poll
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது; காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என தமது 2-வது கருத்து கணிப்பில் Lok Poll திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுயேட்சைகள் உள்ளிட்ட மாநில கட்சிகள் கை ஓங்கும் என்பதும் Lok Poll நிறுவனத்தின் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 46. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக Lok Poll நிறுவனம் புதிய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:
இந்தியா கூட்டணி (காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி- சிபிஎம்) 47 முதல் 51 இடங்கள் (39% முதல் 41% வாக்குகள்)
பாஜக 22 முதல் 25 இடங்கள் (26% முதல் 29% வாக்குகள்)
மக்கள் ஜனநாயகக் கட்சி 5 முதல் 9 இடங்கள் ( 16% முதல் 18% வாக்குகள்)
இதர கட்சிகள் (சுயேட்சைகளை உள்ளடக்கியது) 7 முதல் 11 இடங்கள் (11% முதல் 14% வாக்குகள்).
முன்னதாக, இதே Lok Poll நிறுவனம் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதன் முடிவுகள்:
இந்தியா கூட்டணி (காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி- சிபிஎம்) 51 முதல் 56 இடங்கள் (40% முதல் 42% வாக்குகள்)
பாஜக 23 முதல் 26 இடங்கள் (28% முதல் 30% வாக்குகள்)
மக்கள் ஜனநாயகக் கட்சி 4 முதல் 8 இடங்கள் ( 18% முதல் 20% வாக்குகள்)
இதர கட்சிகள் (சுயேட்சைகளை உள்ளடக்கியது) 3 முதல் 7 இடங்கள் (10 % முதல் 13% வாக்குகள்).
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அல்லது மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைக்கும் வாய்ப்புகளே அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த கருத்து கணிப்பு முடிவுகள். மேலும் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளான பொறியாளர் ரஷீத் எம்பி உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் கை தேர்தலில் ஓங்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications