அமேதி தொகுதியில் ராகுல் காந்தி ”மைத்துனர்” ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
அமேதி: லோக்சபா தேர்தலில் நேரு குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் யார் காங்கிரஸ் வேட்பாளர் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் மைத்துனரான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் திடீரென சுவரொட்டிகளை ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதி.. நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்ற பெருமைக்குரியது. நேருவின் பேரனும் இந்திராவின் மகனுமான சஞ்சய் காந்தி 1980-ல் போட்டியிட்டு வென்ற தொகுதி. சஞ்சய் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி 1981 முதல் 1991-ல் மரணிக்கும் வரை அமேதி தொகுதி எம்பியாக இருந்தார். 1999-ம் ஆண்டு இந்திராவின் மருமகளும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா, அமேதி தொகுதியில் வென்றார். 2004, 2009, 2014-ல் இந்திராவின் பேரனும் ராஜீவ்- சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி ஹாட்ரிக் வெற்றியுடன் எம்பியாக இருந்தார். 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தற்போதைய 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார். காங்கிரஸ் கட்சியோ அமேதி தொகுதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளது. ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதே நாளில்தான் அமேதி தொகுதி வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.
அமேதி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் மைத்துனரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இதனால் ராகுல் காந்தியா? மைத்துனர் ராபர்ட் வதேரா? யார் வேட்பாளர் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமேதி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் மற்றும் ராபர்ட் வதேரா இருவரையுமே விமர்சித்து பேசி வருகிறார். அமேதி தொகுதி மக்களே! உங்கள் சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.. உங்கள் நிலத்தைப் பறிக்க வருகிறார் ராபர்ட் வதேரா என்பது ஸ்மிருதி இரானியின் பிரசாரம்.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே, அமேதி தொகுதி காங்கிரஸ் அலுவலகத்திலேயே ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அமேதியில் ராபர்ட் வதேரா போட்டியிட வலியுறுத்தும் வாசகங்களுடன் அமேதியில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அமேதியில் ராபர்ட் வதேரா போட்டியிடுவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications