அவன் என் தம்பியே கிடையாது.. ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. அறிவித்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் வேட்பாளரை மாற்றக்கூறிய சகோதரர் பவுன் பானர்ஜியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது உறவை துண்டித்துள்ளார். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தற்போது வீதிக்கு வந்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வாக கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளார். இருப்பினும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் உடனான பிரச்சனையால் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிவித்தார்.

அதாவது ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்கி உள்ளது. அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஹவுரா தொகுதிக்கு சிட்டிங் எம்பியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசுன் பானர்ஜி (மம்தா பானர்ஜியின் உறவினர் இல்லை) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாார்.
2019, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் 4வது முறையாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரசுன் பானர்ஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதை மம்தா பானர்ஜியின் சகோதரர் பபுன் பானர்ஜி எதிர்த்துள்ளார். அவருக்கு பதில் வேறு நபரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பபுன் பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று மம்தா பானர்ஜியின் சகோதரர் பபுன் பானர்ஜி அளித்த பேட்டியில் ‛‛ஹவுரா தொகுதிக்கு பிரசுன் பானர்ஜி தேர்வில் சந்தேகம் உள்ளது. அவரது தேர்வு எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. மேலும் இது சரியான தேர்வாக இருக்காது என நினைக்கிறேன். திறமை வாய்ந்த பல வேட்பாளர்கள் இருந்தாலும் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டு பிரசுன் பானர்ஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரசுன் பானர்ஜி என்னை அவமானப்படுத்தி உள்ளார். அதனை மறக்க மாட்டேன். அவருக்கு பதில் தகுதி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும். நான் சொல்வதை மம்தா கேட்கமாட்டார் என்பது தெரியும். இதனால் நான் ஹவுரா தொகுதியில் சுயேச்சையாக கூட களமிறங்குவேன். ஆனாலும் மம்தா பானர்ஜியை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன். எனக்கு விளையாட்டுகள் மீதான ஆர்வம் அதிகம். இதனால் விளையாட்டு துறையில் உள்ள பாஜக தலைவர்களுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. ஆனாலும் கட்சி மாறி நான் செல்லமாட்டேன்'' என்றார்.
பபுன் பானர்ஜி இப்படி பேசியிருப்பது மம்தா பானர்ஜியை கடுமையாக கோபப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அடுத்த சில மணிநேரத்தில் மம்தா பானர்ஜி, சகோதரர் பபுன் பானர்ஜியின் உறவை முறித்து கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, ‛‛ஒவ்வொரு தேர்ல் வேளையில் பபுன் பானர்ஜி பிரச்சனை செய்கிறார். பேராசை படுபவர்கள் மற்றும் வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு அது பிடிக்காது. அவரை நிராகரிக்க முடிவு செய்துள்ளதுடன், அவருடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன். எனது குடும்பமும் அவருடனான உறவை துண்டிக்கும். என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications