லோக்சபா தேர்தல்: ஆந்திராவில் "ஜெகன் " சுனாமி அலை- பாஜகவுக்கு 'முட்டை' - அதிரவைக்கும் கருத்து கணிப்பு
அமராவதி: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 24 முதல் 25 இடங்களையும் கைப்பற்றும் என Times Now - ETG கருத்து கணிப்பு தெரிவித்திருக்கிறது. ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இக்கருத்து கணிப்பு.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக எப்போதும் தோல்வியைத்தான் தழுவிக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளைக் கூட கூட்டணி கட்சியின் தயவில்தான் பெறும் நிலைமை இப்போதும் உள்ளது. மத்தியில் 2 முறை தொடர்ந்து ஆட்சியை பாஜக கைப்பற்றிய போதும் தென்னிந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு ஆதரவு தராமல் குட்பை சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதே நிலைமைதான் தொடரும் என்பதையே கருத்து கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தி வருகின்றன. Times Now - ETG நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே 36 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 24 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது Times Now - ETG கருத்து கணிப்பு.
Times Now - ETG-ன் ஆந்திரா கருத்து கணிப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 24- 25 இடங்கள்; சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் 0 முதல் 1 இடம்; பவன் கல்யாணின் ஜேஎஸ்பி- 0; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- 0.
Times Now - ETG கருத்து கணிப்பானது ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 12 வரை மேற்கொள்ளப்பட்டது. ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியானது 51.3% வாக்குகளைப் பெறும் என்கிறது இந்த சர்வே முடிவு.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியானது 22 இடங்களில் வென்றது. அப்போது 49.8% வாக்குகளைப் பெற்றிருந்தது ஜெகன் கட்சி. மக்கள் நலத் திட்டங்களை ஜெகன் மோகன் அரசு நிறைவேற்றி வருவதால் மக்களிடையே ஆதரவு பேரலையாக பெருகி இருக்கிறது என்பதையே இக்கருத்து கணிப்பு வெளிப்படுத்துகிறது.
Times Now - ETG கருத்து கணிப்பின் படி இந்திய அளவில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களைப் பெறுமாம். "இந்தியா" கூட்டணிக்கு 160 முதல் 190 இடங்கள் கிடைக்கும்.
இந்திய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 42.60 % , "இந்தியா" கூட்டணி 40.20%, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 2.67%, பிஆர்எஸ் 1.15% வாக்குகளைப் பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் கூட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குதான் "ஆதரவு பேரலை" இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications