ஒரே ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏவும் ஆளுங்கட்சியில் இணைந்தார்.. எதிர்க்குரலே இல்லாத சிக்கிம் சட்டசபை!
கேங்டாக்: சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான டென்சிங் நோர்பு லாம்தா, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். இதன் மூலம் எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை ஆகியுள்ளது சிக்கிம் சட்டசபை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் லோக்சபா தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்தது. மொத்தம் 32 இடங்கள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில் சிக்கிம் முதலமைச்சராக பிரேம் சிங் தமாங் மீண்டும் பதவியேற்றார். ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ டென்சிங் நூர்பு லம்தா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டென்சிங் நூர்பு லம்தா அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான பிரேம் சிங் தமாங்கை சந்தித்து, எஸ்.கே.எம் கட்சியில் ஐக்கியமானார். இதனால் எதிர்கட்சியே இல்லாத சட்டசபையாக சிக்கிம் சட்டசபை மாறியுள்ளது.
ஆளும் கட்சியில் இணைந்துள்ள டென்சிங் நூர்பு லாம்தா, சட்டமன்றத் தேர்தலில் எஸ்.கே.எம் கட்சி மூத்த தலைவரும் கல்வி அமைச்சருமான குங்கா நிமா லெப்சாவை 1,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார்.
கட்சி தாவிய டென்சிங் நூர்பு லம்தா, "கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.கே.எம் அரசு மாநில வளர்ச்சிக்காக மகத்தான பணிகளைச் செய்துள்ளதன் காரணமாகவே அமோக வெற்றியை பெற்றது. மக்கள் மனநிலை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால் எஸ்.கே.எம்.மில் சேர பரிந்துரைத்த எனது தொகுதியினரிடம் ஆலோசனை கேட்டேன்" என்று செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.
"சியாரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டென்சிங் நோர்பு லாம்தா இன்று எனது அதிகாரப்பூர்வ இல்லமான மின்டோக்காங்கில் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் அதிகாரப்பூர்வமாக எங்கள் SKM குடும்பத்தில் இணைந்துள்ளார்" என்று சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications