ஸ்ரீரங்கம்.. ராமேஸ்வரம்.. தனுஷ்கோடி.. ராமர் வந்து விட்டார்.. நாடெங்கும் ராமநாமம்.. மோடி பெருமிதம்
அயோத்தி: 11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பால ராமர் சிலையின் கண் இன்று திறக்கப்பட்டது. பால ராமருக்கு முதல் பூஜையை பிரதமர் மோடி செய்தார். தாமரை மலர்கள் வைத்து மனமுருகி வேண்டிக்கொண்டார் மோடி. இது ஒரு தெய்வீக அனுபவம் என்றும் கூறினார் மோடி

பாலராமர் பிரதிஷ்டை முடிந்த நிலையில் அயோத்தி கோயில் வளாகத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி; சன்னியாசிகள், பக்தர்களை அயோத்திக்கு வரவேற்கிறேன். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.
1,000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ராமர் கோயில் திறப்பு மூலம் அடிமை மனநிலைக்கு முடிவுகட்டியுள்ளோம். நமது தியாகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன்.
ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார்; ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது. ராமர் கோவில் கட்ட பாடுபட்ட கரசேவகர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராமர் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல்ல ஆற்றல் கொடுக்கும் சக்தி என்றும் பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார்.
யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றியல்ல கண்ணியமாக கிடைத்த வெற்றி. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி. அயோத்திக்கு ராமர் வந்து விட்டார்.. ஆன்மீகத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் ஜெயித்திருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications