நாசாவில் வேலை.. சம்பளம் 1.8 கோடி... ஒபாமா கையெழுத்துடன் உதார் விட்ட இந்தியர் கைது
போபால்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் வேலை பார்ப்பதாக, ஒபாமாவின் கையெழுத்துடன் கூடிய போலி அடையாள அட்டை வைத்திருந்த இளைஞரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அன்சார் கான் எனும் 20 வயது இளைஞர். சமீபத்தில் இவர் நாசாவில் பணிக்கு சேர்ந்துள்ளதாக தனது குடும்பத்தார் மற்றும் தெரிந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பளம் ரூ. 1.8 கோடி எனவும் கூறியுள்ளார்.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அவர் படித்த பள்ளி நிர்வாகம், அன்சாருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்தது. இந்த பாராட்டு விழாவுக்கு போபால் நகர காவல்துறையில் பணிபுரியும் சசிகாந்த் சுக்லாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட சசிகாந்த், அன்சாரிடம் இருந்த நாசா அடையாள அட்டையை வாங்கிப் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அந்த அடையாள அட்டை குறித்த சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். விசாரணையில் அன்சாரிடம் இருந்தது போலி அடையாள அட்டை என்பதும், அவர் நிஜமாகவே நாசாவில் பணி புரியவில்லை என்பதும் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து அன்சாரைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த போலி அடையாள அட்டையையும் கைப்பற்றினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications