பிராமணர்கள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு.. மத்திய பிரதேச வாரியத் தலைவர் அதிரடி அறிவிப்பு!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பிற்காக நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பிராமண தம்பதியர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில பரசுராம் கல்யாண் என்ற பிராமண வாரிய தலைவர் பண்டிட் விஷ்ணு ராஜோரியா என்பவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என அரசு சார்பில் கூறாவிட்டாலும் பொதுமக்கள் பலருமே ஒரே குழந்தை போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் பிராமணர்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொண்டால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிராமண வாரியம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சருக்கு நிகரான பரசுராம் கல்யாணம் என்ற பிராமண வாரிய தலைவர் பதவி இருக்கிறது. இந்த வாரியத்தின் தலைவரான பண்டிட் விஷ்ணு ராஜோரியா என்பவர் தான் அப்படி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற போது அதில் பண்டித் விஷ்ணு ரஜோரியா கலந்து கொண்டார்.
மதவெறியர்கள் எண்ணிக்கை:
அப்போது பேசிய அவர்,” நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நாம் நிறுத்தி விட்டதால் மதவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது இளைஞர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. வயதானவர்களிடம் நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனவே நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்க வேண்டும். எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்கு நீங்கள் தான் பொறுப்பு. தற்போது இளைஞர்கள் ஒரே ஒரு குழந்தையை பெற்றுவிட்டு செட்டில் ஆகி விடுகிறார்கள் இது மிகவும் அபாயமானது.
பிராமண இளைஞர்கள்:
நமது பிரமாண இளைஞர்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிராமண தம்பதியர்களுக்கு பரசுராம் வாரியம் ஒரு லட்சம் பரிசு வழங்கும். நான் தற்போது வாரிய தலைவராக இருக்கிறேன். நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விருது கண்டிப்பாக கிடைக்கும்.
கடும் சர்ச்சை:
கல்வி விலை உயர்ந்ததாக மாறிவிட்டது என இளைஞர்கள் என்னிடம் சொல்கிறார்கள். தற்போதைக்கு அதனை எப்படியாவது சமாளித்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் பின்வாங்கவே கூடாது. இல்லையென்றால் மதவெறியர்கள் இந்த நாட்டை கைப்பற்றவர்கள்” எனக் கூறியிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் மத்திய பிரதேசத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications