பாஜக VSகாங்கிரஸ்..மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?என்னங்க இப்படி இருக்கு?புது சர்வே
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் யாருமே எதிர்பாராத வகையில் செம ட்விஸ்ட்டாக ரிசல்ட் அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்றனர். இதையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் அங்கு முதல்வராக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 17 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், பாஜக இடையே தான் நேரடி போட்டி உள்ளது. இதனால் இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதனால் மேஜிக் நம்பரான 116 தொகுதிகளில் வெல்லும் முனைப்பில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களப்பணியை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தான் டைம்ஸ் நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ், பாஜக கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது இருகட்சிகளும் பெரும்பான்மையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதும் எனவும், கடைசியில் மயிரிழையில் தான் ஒரு கட்சி வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி பாஜக 107 முதல் 115 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 112 முதல் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், மற்ற கட்சிகள் 1 முதல் 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி இந்த கருத்து கணிப்பின்படி பார்த்தால் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications