'ஸ்பெல்லிங்' தவறாக சொன்னதால்.. 5 வயது சிறுமியின் கையை பிடித்து.. இழுத்து உடைத்த ஆசிரியர்.. கொடூரம்
போபால்: ஆங்கில வார்த்தைக்கு 5 வயது சிறுமி தவறாக ஸ்பெல்லிங் கூறியதால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவியின் கையை உடைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் 4 இடங்களுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்ட அந்த மாணவி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கை பழைய நிலைக்கு வர ஒரு வருடத்தை தாண்டிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறுமியின் கையை உடைத்துவிட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், மாணவி மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொடூர மனம் படைத்த ஆசிரியர்கள்..
சமீபகாலமாக, மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அதிகப்படியான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை பார்க்க முடிகிறது. மாணவர்களை பெற்றோர்கள் ஸ்தானத்தில் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், கண்டிப்பு என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும், குரூரத்தையும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அண்மைக்காலங்களில் நிகழும் சம்பவங்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. அப்படியொரு பயங்கர சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

பள்ளியில் சேர்க்க டியூஷன்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிஷோர் குமார் - லட்சுமி பாய் தம்பதியர். இவர்களுக்கு சுவாதி (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, சுவாதியை அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக கடந்த மாதம் அவளது பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது, பள்ளியில் சேர்க்க நுழைவுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

கையை உடைத்த ஆசிரியர்
இதையடுத்து, இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிறுமி சுவாதியை, அருகில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் அவர்கள் சேர்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுமியிடம் ஆசிரியர் பிரயாக் விஸ்வகர்மா (24), சில ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் கேட்டுள்ளார். அப்போது, ஒரு சொல்லுக்கு மட்டும் சிறுமி தவறாக ஸ்பெல்லிங் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பிரயாக் விஸ்வகர்மா, சிறுமியின் வலது கையை முறித்து கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், அந்த கையை விடாமல் முறித்தபடியே இழுத்து சென்றுள்ளார்.

கைது நடவடிக்கை
இதில் சிறுமியின் கை எலும்புகள் உடைந்ததால் அவர் தரையில் படுத்து துடித்திருக்கிறார். இதனால் பயந்துபோன ஆசிரியர், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். அதன் பின்னர், அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், அவரது வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் பிரயாக் விஸ்வகர்மாவை இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications