டெம்போவில் காலை கட்டி.. ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்டனை.. ம.பியில் ஆதிவாசி கொடூர கொலை
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் காலை 8 பேர் கொண்ட கும்பல் டெம்போவில் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் சமீப காலமாக குழு வன்முறை அதிகரித்து வருகிறது. குழுவாக சேர்ந்து ஒருவரை போட்டு அடிப்பது, சிறிய தவறுக்காக ஒரு நபரை மொத்தமாக பலர் சேர்ந்து அடித்து கொலை செய்வது என்று வடஇந்தியாவில் குழு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
அப்படி ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாதராண சாலை விபத்து ஒன்று மிகப்பெரிய குழு வன்முறை கொலையில் முடிந்துள்ளது.

என்ன நடந்தது
மத்திய பிரதேசத்தில் உள்ளே நீமுச் மாவட்டத்தில் உள்ள பண்டா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் சாலை ஓரத்தில் கன்ஹையாலால் பீல் என்ற ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பால் வண்டி இவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் பால் கேன் எடுத்து வந்த பைக் ஓட்டுநர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். கன்ஹையாலால் சாலையை கடக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயம்
பால்காரர் பைக்கில் கொண்டு வந்த மொத்த பாலும் தரையில் கொட்டி வீணாகி உள்ளது. பால்காரர் பெயர் சிட்டார் மால் குர்ஜார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பால் கொட்டிய கோபத்தில் அங்கேயே ஆதிவாசி கன்ஹையாலாலை சரமாரியாக தாக்கி இருக்கிறார் பால்காரர் குர்ஜார். குச்சி, கட்டைகளால் கன்ஹையாலாலை மிக மோசமாக தாக்கியவர், தனது நபர்களுக்கும் போன் செய்து வரவழைத்து இருக்கிறார். இங்கே விபத்து ஏற்பட்டுவிட்டது, பால் மொத்தமும் கொட்டிவிட்டது.. கன்ஹையாலாலுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று போன் செய்து நண்பர்களை வரவழைத்து இருக்கிறார்.

7 பேர்
அந்த பகுதிக்கு சுமார் 7 பேர் வந்துள்ளனர். எல்லோரும் சேர்ந்து கன்ஹையாலாலை மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர். அதோடு விடாமல் அவரை அந்த வழியாக வந்த டெம்போவில் கட்டி வைத்து அடித்து உள்ளனர். பின்னர் டெம்போவின் பின் பக்கத்தில் கயிறு ஒன்றை கட்டி அதன் இன்னொரு முனையை கன்ஹையாலாலின் காலில் கட்டி உள்ளனர். பின்னர் அந்த டெம்போவை வேகமாக சாலையில் ஓட்டி சென்றுள்ளனர்.

இழுத்து சென்றனர்
பின் பக்கத்தில் கட்டப்பட்ட கன்ஹையாலால் சாலையிலேயே தரதரவென இழுத்து செல்லப்பட்டார். முதலில் விளையாட்டாக இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த கன்ஹையாலால் சிரித்தபடி மன்னிப்பு கேட்டார். ஆனால் அதன்பின் டெம்போ வேகமாக சில மீட்டர்கள் தூரம் இயங்கி இருக்கிறது. இதில் சாலையிலேயே படுத்து, இழுத்து செல்லப்பட்ட கன்ஹையாலாலை ஐயோ காப்பாற்றுங்கள் என்று கதறி இருக்கிறார். ஆனால் அவர் துடித்த போதும் கூட வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக இழுத்து சென்றுள்ளனர்.

காயம்
இதில் அவரின் பின் மண்டை, உடல் முழுக்க கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த பின் உடல் முழுக்க காயம் அடைந்த கன்ஹையாலாலை சாலையிலேயே வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் கிளம்பி சென்றுள்ளது. இதை சுற்றி நின்ற மக்கள் கூட்டம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்து இருக்கிறது. அவரின் உடலில் கயிறை கட்டி இழுக்கும் போது அதை வீடியோ எடுத்த கும்பல் இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் பலரும் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். ஆனால் யாரும் இந்த கும்பல் வன்முறையை தடுப்பதற்காக முன்வரவில்லை.

போலீஸ்
இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்கள் கழித்து வீடியோ வைரலானதன் மூலம் போலீசுக்கும் தகவல் சென்றது. பின்னர் காயம் அடைந்த கன்ஹையாலாலை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இவரின் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. உடனே இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். முதுகில் மோசமான காயம், பல இடங்களில் எலும்பு முறிவு, பின் மண்டையில் காயம் ஏற்பட்ட நிலையில் கன்ஹையாலால் சிகிச்சை பலனின்றி பலியானார்.
|
உயிர்
உயிர் போகும் முன் வீடியோவில் சிரித்தபடி இவர் கையெடுத்து கும்பிட்ட காட்சி இணையத்தை உலுக்கி உள்ளது. நமக்கு எதுவும் நடக்காது.. விளையாடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர் அடுத்த சில நிமிடங்களில் பலியாகி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பால்காரர் உட்பட மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. 302 பிரிவில் கீழ் கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கைது
சிட்டார் மால் குர்ஜார், மஹேந்திரன் குர்ஜார், கோபால் குர்ஜார் ஆகியோர் உட்பட 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனம், நைலான் கயிறு கைப்பற்றப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இது போன்ற கொடூரமான கொலை சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications