"மனித நேயம்" எங்கே போனது.. பஸ்ஸில் உயிருடன் எரிந்த பயணிகள்.. நிற்காமல் பறந்த கார்கள்! ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து சில பகீர் தகவல்களை அதில் பயணித்த ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள சிந்த்கத்ராஜா அருகே உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நாக்பூரில் இருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் அந்த தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த உடன் வாகனத்தில் தீப்பற்றிவிட்டது.
மகாராஷ்டிரா விபத்து: இந்த கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேரில் 25 பேர் உடல் கருகிப் பலியாகினர். இந்த விபத்தில் தப்பிப் பிழைத்த ஒருவர் இது குறித்துக் கூறுகையில், "பஸ்ஸின் ஒரு டயர் வெடித்துச் சிதறியது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அது அங்கே இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதே நேரத்தில் பஸ்ஸில் தீப்பிடித்தது.அந்த தீ வாகனம் முழுக்க வேகமாகப் பரவி விட்டது. இவை அத்தனையும் சில நொடிகளில் நடந்துவிட்டது.

நான் பின்பக்கம் அமர்ந்திருந்தேன். நானும் எனது அருகில் இருந்த மற்றொரு பயணியும் பின்புறம் இருந்த கண்ணாடியை உடைத்து அதன் வழியாகத் தப்பித்தோம். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனேயே போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மிக வேகமாகச் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.
காரை நிறுத்தவில்லை: இந்த விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தினர் தான் விரைந்து வந்து அவர்களைக் காப்பாற்றினர். அப்படிக் காப்பாற்றிய ஒருவர் கூறுகையில், :ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து 4,5 பயணிகள் வெளியே வந்துவிட்டனர். இருப்பினும், அனைத்து பயணிகளாலும் சரியான நேரத்தில் வெளியே வர முடியவில்லை. பஸ்ஸில் இருந்து மெல்ல தவழ்ந்து வந்தவர்கள், அங்கே காரில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். இருப்பினும், யாருமே தங்கள் காரை நிறுத்தவில்லை என்பதே துரதிஷ்டவசமான உண்மை.
இந்த ரோட்டில் பிம்பால்குடாவில் பல விபத்துகள் நடக்கின்றன. நாங்களே பல நேரங்களில் பலருக்கு உதவியுள்ளோம். இங்குச் சாலைகளில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இதன் காரணமாகவே வரிசையாகப் பல விபத்துகள் ஏற்படுகிறது. உள்ளே இருந்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியே வர முயன்றனர். எங்களால் இங்கே இருந்து எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் கண் முன்னால் மக்கள் உயிருடன் எரிவதைக் கண்டோம்.
கொடூரம்: தீ மிகவும் உக்கிரமாக இருந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்கள் கண்ணீருடன் இருந்தோம். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தியிருந்தால் நிச்சயம் மேலும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இந்த கொடூர விபத்தில் மக்கள் உயிருடன் எரிந்து கொண்டிருக்கும் போது, அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை எங்களால் ஏற்கவே முடியவில்லை" என்றார்.
இந்த கொடூர விபத்தில் 8 பேர் தப்பிப் பிழைத்தனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இப்போது நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாலைகளில் இதுபோன்ற கொடூர விபத்துகள் நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க சாலை பாதுகாப்பை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications