மழையில் நனைந்தபடி நின்ற டாக்டர்கள்.. உள்ளே வந்து டீயாவது குடிச்சிட்டு போங்க.. மம்தா வேண்டுகோள்!
கொல்கத்தா: போராடி வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பும் வேண்டுகோளை மம்தா ஏற்காததால் அவர்கள் வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். அவர்களை உள்ளே வந்து டீ குடித்துவிட்டாவது செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். உங்களுக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன். இது உத்தர பிரதேசம் அல்ல. எஸ்மா சட்டத்தை அமல்படுத்தி அனைத்து விதமான பேரணிகளையும் அவர்கள் நிறுத்தினர். ஆனால் நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் உன்னதமான வேலை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கனிவோடு பேசினார் மம்தா.
இதையடுத்து இன்று இரவு, போராடி வரும் மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது இல்லத்துக்கு முன்பாகச் சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை மம்தா ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.
தனது வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, “நீங்கள் என்னை சந்திக்க விருப்பினீர்கள். நான் அதற்கு சம்மதித்து உங்களுக்காக காத்திருக்கிறேன். என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள், ஏற்கவே உங்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவு செய்து வீட்டுக்குள் வாருங்கள்.
என்னை சந்திக்க விருப்பம் இல்லாவிட்டாலும் உள்ளே வந்து ஒரு கப் டீயாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். நாங்கள் அனைவரும் - தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம். நீங்கள் மழையில் நனையாமல் இருக்க நாங்கள் உங்களுக்கு குடைகளை வழங்கியுள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள், மம்தா பானர்ஜி இல்லத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications