யாஸ் புயல் சேத ஆய்வு கூட்டம்.. பிரதமர், ஆளுநரை 30 நிமிடங்கள் காக்க வைத்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் அரை மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாஸ் புயலால் கடந்த 26 ஆம் தேதி ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. அதிதீவிர புயலாகவே இது கரையை கடந்ததால் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தா சென்றிருந்தார். அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கர், அதிகாரிகளுடன் மேதினிபூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம்
மம்தா பானர்ஜிக்கு இந்த கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும் அவர் 30 நிமிடங்கள் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார். அங்கு யாஸ் புயல் சேத விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை ஒப்படைத்துவிட்டு நேற்று மதியம் நடந்த மற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு சென்றுவிட்டார். மேலும் திகாவில் மீட்பு பணிகளை பார்வையிட வேண்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

நிவாரணம்
மத்திய அரசிடம் இருந்து ரூ 20 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார் மம்தா. முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரை பிரதமருடன் ஆலோசனை நடைபெறும் இடத்திற்கு தாமதமாக தரையிறக்குமாறு முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்டிங்
அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது மீட்டிங் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியை ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் அழைத்தது மம்தாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த கூட்டத்தை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

ஆளுநர் கண்டனம்
இந்த மீட்டிங் நேற்று மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நேருக்கு நேர் நடத்தப்பட்ட முதல் கூட்டம் இது. இதுகுறித்து ஆளுநர் தன்கர் கூறுகையில் மேற்கு வங்க மக்களின் நலனுக்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முதல்வரும் அவர் சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளாதது ஆட்சிக்கும் அரசியலமைப்பிற்கும் எதிரானது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications