என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.. ஃபேன் ரிப்பேர்னு காதலனை வீட்டுக்கு கூப்பிட்டு.. கொடூரமாக கொன்ற நர்ஸ்
ஆக்ரா: என்ன இப்போது பெண்களும் இந்த மாதிரி இறங்கி விட்டார்களே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது உத்தரபிரதேசம்.
காதலிக்கும் பெண்கள் வேறு ஒருவரை மணம் முடித்தால் அந்த காதலன் மிருகமாக மாறி காதலி முகத்தில் திராவகம் வீசி கொலை செய்வது அல்லது முகத்தை கோரமாக மாற்றுவது உள்ளிட்ட பல கொடூர சம்பவங்கள் நமது நாட்டில் நடந்துள்ளன. தமிழகத்திலும் அரங்கேறியுள்ளன.
சில நேரங்களில் ஒருதலையாக காதலித்து விட்டு அந்தப் பெண் தனது காதலை ஏற்கவில்லை என்பதற்காகவும் கொடூர மனம் கொண்ட இளைஞர்கள் அப்பாவி பெண்கள் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரம் அரங்கேறியதை நாம் பார்த்துள்ளோம்.

பிகில் பட காட்சி
சமீபத்தில் வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கூட ஆசிட் வீச்சால் பெண் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதையும், அந்தப் பெண் உளவியல் என்ன என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். இது சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற காட்சியாக அமைந்தது.

விழிப்புணர்வு தேவை
திராவக வீச்சு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மிகப்பெரிய கொடுமையானது, தவறானது, என்று சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்த ஆண் மீது, பெண் ஒருவர் திராவகம் வீசி கொலை செய்துள்ளார் என்ற தகவல் திடுக்கிட வைப்பதாக அமைந்துள்ளது.

காதலர்கள்
ஆக்ரா நகரத்தைச் சேர்ந்தவர் சோனம். ஆம்.. காதலுக்கு இலக்கணமாக சொல்லப்படும், தாஜ்மகால் அமைந்துள்ளதே அதே ஆக்ரா நகரம்தான். இந்த பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அங்கு ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தேவேந்திரா என்ற ஆணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக ஒன்றாக சுற்றி வந்தனர்.

வேறு பெண்ணுடன் திருமணம்
இந்தநிலையில், தேவேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. இதனால் சோனம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். தனக்கு கிடைக்காத தேவேந்திரா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று மனதுக்குள் வஞ்சகத் திட்டம் தீட்டியுள்ளார். இது தேவேந்திராவுக்கு தெரியாது.

ஃபேன் ரிப்பேர்
இந்த நிலையில், தனது வீட்டில் மின் விசிறி பழுதாகி விட்டதாகவும், அதை சரி செய்து தர நீ தான் வரவேண்டும் என்று தேவேந்திராவா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார் சோனம். இதை நம்பிய அவர் சோனம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தேவேந்திரா மீது வீசியுள்ளார் சோனம்.

கொலை வழக்கு
துடிதுடித்துப் போய் அங்கேயே சுருண்டு விழுந்த தேவேந்திராவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பலியாகிவிட்டார். இப்படி திராவகம் வீசிய போது கைகள் உள்ளிட்ட சில இடங்களில் சோனத்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கொலை வழக்கில் சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில், இளம் சமூகத்திடம், எந்த அளவு சகிப்புத் தன்மை இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது, வன்முறை மனநிலை மக்களிடம் எப்படி வந்தது என்பது பற்றி யோசிக்க வைத்துள்ளது இந்த சம்பவம்.


Click it and Unblock the Notifications
