இந்தியாவுக்கு எதிராக போர்! வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் சதி? இளைஞர் கைது.. மணிப்பூரில் என்ன நடக்கிறது
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு ஒருவர் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சதி செய்வதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கே இரு இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிந்து வருகிறது.

அங்கு நடந்த சில மோசமான சம்பவங்களின் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது. இதையடுத்து உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அதன் பின்னரே வன்முறையைத் தடுக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையடுத்து சில காலம் அங்கே அமைதி திரும்பி இருந்தது. இந்தச் சூழலில் அங்கே திடீரென மைனர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட போட்டோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் மீண்டும் மணிப்பூர் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை நேற்று சனிக்கிழமை, மணிப்பூரைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தது.
இந்தியாவுக்கு எதிராகச் சதி: அவர் வங்கதேசம் மற்றும் மியான்மரை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுட் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராகப் போர் நடத்த அவர் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இப்போது கைது செய்யப்பட்டவர் சீமின்லுன் காங்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மணிப்பூரின் சுராசந்த்பூரை சேர்ந்த இந்த நபரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
பயங்கரவாத அமைப்புகள்: அவர் மணிப்பூரில் இருந்து இப்போது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். வங்கதேசம் மற்றும் மியான்மரில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள போராளித் தலைவர்களுடன் இணைந்து நாட்டில் வன்முறையை ஏற்படுத்தத் திட்டமிடுவதாகவும் இதன் மூலம் நாட்டில் இருக்கும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்வதாகவும் தேசிய புலனாய்வு முகமை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்யும் இந்த வெளிநாட்டு அமைப்புகள் ஆயுதங்கள், வெடிமருந்துகளைப் பயங்கரவாத அமைப்புகள் வாங்கத் தொடர்ந்து நாட்டிற்கு வெளியே இருந்து நிதி வழங்கி வருகிறது. இதற்காக அவர்கள் மணிப்பூரில் போல வன்முறை இருக்கும் மாநிலங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ரத்து: முன்னதாக சமீபத்தில் தான் குக்கி ஆயுதக் குழுக்கள், இந்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு இடையே போடப்பட்ட SoO ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழலில் இந்திய அரசுக்கு எதிராகப் போருக்குச் சதி செய்த நபரைத் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த SoO ஒப்பந்தத்தின்படி கிளர்ச்சியாளர்கள் அரசின் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும். மேலும், அவர்களின் ஆயுதங்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்படும்.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில கிளர்ச்சிக் குழுக்கள் மணிப்பூர் மோதலைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்தே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு அமைதியைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications