மணிப்பூர் சட்டசபை தேர்தல்: பாஜகவிடம் சீட் கேட்டு நூல்விடும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர்!
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர் ஒன்லர் கோம் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்லர் கோம் போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெல்லக் கூடிய வாய்ப்பிருக்கிறது என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த நிலையில் மேரி கோமின் கணவர் ஒன்லர் கோம் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சாதனை பெண்மணி
2005, 2006, 2008, 2010 உலக சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று சாதனை பெண்மணியாக உருவெடுத்தவர் மேரிகோம். இந்தியாவின் குத்துசண்டை முகம் என சர்வதேச அடையாளம் பெற்றவர் மேரி கோம். திருமணம், குழந்தைகள் என வாழ்வின் ஒரு கட்டத்தைத் தாண்டிய நிலையில் சாதிக்க கூடிய இரும்புப் பெண்மணியாக போற்றப்படுகிறவர் மேரிகோம்.

மேரி கோம் கணவரின் அறிவிப்பு
மேரி கோம் தற்போது ராஜ்யசபா நியமன எம்.பி.யாக உள்ளார். கணவர் ஒன்லர் கோம், சூரத்சந்த்பூர் மாவட்டம் சாய்கோட் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இத்தொகுதிக்குட்பட்ட சமுலாம்லான் கிராமத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்லோர் இதனை அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் சர்ச் தலைவர்கள், கிராம தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், இளைஞர் அமைப்பு தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வானது ஒன்லோர் கோமுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வாகவும் நடத்தப்பட்டது.

காங். எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போட்டி
சாய்கோட் சட்டசபை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.என்.ஹயோகிப். அவரை எதிர்த்துதான் ஒன்லோர் கோம் களமிறங்க உள்ளார். இருப்பினும் எந்த கட்சியின் சார்பில் தாம் போட்டியிடப் போகிறேன் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பாஜகவின் வேட்பாளரா?
இது தொடர்பாக மணிப்பூர் மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, ஒன்லோர் கோம் பாஜகவிடம் சீட் கேட்டு முயற்சித்து வருகிறார். அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கினால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார். இல்லை எனில் சுயேட்சையாகவும் களமிறங்கலாம். அவருக்கு தேவாலயங்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
