இழக்காமல் இருப்பது எப்படி என்பதை கற்றுள்ளேன்.. மஞ்சு வாரியர் கூறுவது திலிப் திருமணம் பற்றியா?
திருவனந்தபுரம்: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியரின் வார்த்தைகளில் வேறு பொருள் தேடிக் கொண்டுள்ளனர் மல்லுவுட் ரசிகர்கள்.
சமீபத்தில்தான் அவரது முன்னாள் கணவர் திலிப் நடிகை, காவ்யா மாதவனை மறு மணம் செய்தார். இந்த திருமணம் குறித்து மஞ்சு வாரியர் ஏதாவது கருத்து கூறுவாரா என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் மஞ்சுவாரியர் மீடியாக்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில்தான், தனது பேஸ்புக் பக்கத்தில், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து கருத்து கூறினார் மஞ்சு வாரியர். அந்த கருத்து அடிப்படையில் அவர் தனது மாஜி கணவர் குறித்துதான் ஏதோ சொல்ல வருகிறார் என கேரள சோஷியல் மீடியாக்களில் டாக் உள்ளது.
இரங்கல் செய்தியில் மஞ்சு வாரியர் கூறுகையில், உலகில் எங்கெல்லாம் மக்கள் கஷ்டப்படுகிறாரோ அங்கெல்லாம், பிடல் காஸ்ட்ரோவே ஆறுதலாக இருந்தார். அவரது நெடும் போராட்டத்தின்போது மக்கள் அவருடனேயே இருந்தனர். தனது ஆழ்ந்த கொள்கைகள் மூலமும், திடமான மனதின் மூலமாகவும், மிகப்பெரிய எதிரிகளை வென்றார்.
பிடல் காஸ்ட்ரோவின் 'மை லைப்' புத்தகத்தை வாசித்த பிறகு எனது வாழ்க்கைக்கு அது தந்த ஊக்கம் லேசானது கிடையாது. இழக்காமல் இருப்பது எப்படி என்பதை நமக்கு கற்றுத் தந்ததற்காக அவர் வருங்காலத்திலும் நினைவு கூறப்படுவார். பை டியர் பிடல். இவ்வாறு மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள், 4.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர்கள், மூன்றரையாயிரம் கமெண்டுகள் என இந்த போஸ்ட் வைரலாகியுள்ளது. பிடலை போலவே நீங்களும் தைரியமான நபர் என ரசிகர், ரசிகைகள் மஞ்சு வாரியருக்கு ஆறுதல் கூறியபடி உள்ளனர். பிடலை போலவே உங்கள் பக்கமும் மனிதர்கள் நிற்கிறோம் என கூறியுள்ளோரும் உண்டு.


Click it and Unblock the Notifications
