கேரளாவில் பதற்றம்: தேர்தல் அதிகாரியை ஆவேசமாக தாக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதி!
கண்ணூர் : கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி மீது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாக்குச்சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். இதே போல் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.

தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்
இந்த நிலையில் கண்ணூர் மாவட்டம் பையனூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி முகமது அஷ்ரப் கலத் என்பவர் பணியில் இருந்தார். அப்போது ஒருவர் ரேஷன் கார்டுடன் வாக்களிக்க வந்தார். இதனால் அந்த நபரை முகமது அஷ்ரப் தடுத்து நிறுத்தினார். அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலர் திடீரென முகமது அஷ்ரபை கடுமையாக தாக்கினார்கள்.

மருத்துவமனையில் அனுமதி
இதில் காயம் அடைந்த முகமது அஷ்ரப் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுபற்றி போலீசில் தேர்தல் பணியாளர்கள் புகார் அளித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு வேறு ஒரு தேர்தல் அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

காங்கிரஸ் முகவர் மீதும் தாக்குதல்
இதேபோல் திரிகாரிப்பூர் தொகுதியில் உள்ள பிலிகோட் பஞ்சாயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் முகவர் ஜேம்ஸ் மரூர் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோவும் வெளியானது. அங்கு பதற்றம் நிலவியது. வாக்குப்பதிவை நிறுத்தும்படி தேர்தல் அதிகாரிகளிடம் காங்கிரஸ் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications