லவ் ஜிகாத்.. மருத்துவ மாணவியை சரமாரி தாக்கிய பெண் போலீஸ்.. வைரல் வீடியோ
மருத்துவ மாணவியை பெண் போலீஸ் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

உத்தரபிரதேசம்: மீரட் நெடுஞ்சாலையில் போலீஸ் ஜீப் பறந்து கொண்டிருக்கிறது.
அந்த ஜீப்பில் இருந்த இளம்பெண்ணை பளார் பளார் என அறைவிட்டவாறே ஒரு பெண் போலீஸ் கேட்கிறார், "உனக்கு பழக இந்து இளைஞன் யாருமே கிடைக்கலையா? ஒரு முஸ்லீம் இளைஞன்தான் கிடைச்சானா என்று!!! இந்த காட்சிதான் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வரும் வீடியோ ஆகும்.
[27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியர்.. திரண்டு வந்து தாக்கிய குடும்பம்.. வீடியோ]
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த ஞாயிறு அன்று, தன் வகுப்பில் படிக்கும் தோழியுடன் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கே அங்கே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் திடீரென 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் இருவரையுமே சரமாரியாக தாக்கினர்.

லவ் ஜிகாத்
இதனால் இளைஞரும், பெண்ணும் நிலைகுலைந்து போனார்கள். அத்துடன், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக அந்த அமைப்பினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 2 ஜீப்பில் போலீசார் விரைந்து வந்தனர். ஏற்கனவே தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவரும் போலீசாரை கண்டதும் இன்னமும் பதறினர்.

முகத்தை மூடிக்கொண்டார்
இதனால் அந்த பெண் தன் முகத்தை துணியால் மூடிக் கொண்டார். போலீசார் உடனடியாக இளைஞரையும், பெண்ணையும் தனித்தனியாக ஜீப்பில் ஏற்றிக் கொண்டனர். அந்த பெண்ணின் ஒருபக்கம் ஒரு ஆண் போலீசும், மற்றொரு பக்கம் பெண் போலீசும் உட்கார்ந்தனர். ஜீப்பின் முன்சீட்டில் 2 ஆண் போலீஸ் இருந்தார்கள். மாணவியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் போலீசார்.ஜீப் சாலையில் செல்ல ஆரம்பித்தது.

இந்து இளைஞர்களே இல்லையா?
அப்போது மாணவியின் பக்கத்தில் இருந்த பெண் போலீஸ், "உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்களேயே இல்லையா? ஏன் முஸ்லிம் இளைஞரோடு பழகுகிறாய்?" என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அந்த பெண்ணை அடித்து கொண்டே வந்தார். மேலும் "இனிமேல் எந்த முஸ்லீம் இளைஞரோடு பழகுவாயா? பழகுவாயா" என்று அந்த பெண் போலீஸ் மாணவியை கேட்டு கேட்டு அடித்தார்.
மாணவிக்கு சரமாரி அடி
அப்போது இன்னொரு போலீஸ் தகாத வார்த்தைகளில் மாணவியை திட்டிக் கொண்டே வருகிறார். பெண் போலீஸ் அப்படி கேட்பதையும், சரமாரி அடிப்பதையும் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னொரு போலீஸ் வீடியோ எடுத்துள்ளார். இஸ்லாமிய இளைஞருடன் இந்து பெண் பழகக்கூடாது என்று அனைவருமே அந்த பெண்ணுக்கு திட்டியும் அடித்தும் பாடம் நடத்தி வருகின்றனர்.

விடுவிக்கப்பட்டனர்
தாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை தெரியப்படுத்ததான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டது. ஜீப்பில் இருந்தபடியே உடனடியாக சமூகவலைதளங்களில் பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ மாணவனும், மாணவியும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு விசாரணை நடைபெற்றது. அதற்குள் போலீஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதையடுத்து, மாணவியும், மாணவியும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் கண்டனம்
மாணவியை தாக்கிய பெண் போலீஸ் உட்பட ஜீப்பில் இருந்த 4 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதோடு இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சரமாரி தாக்கிய சம்பவமும் கொச்சையான வார்த்தைகளில் ஆபாசமாக திட்டுவதையும் வீடியோவில் கண்ட பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications