வெள்ள நிவாரணத்தை நீங்க கொடுக்காம! மத்திய அரசு மேல ஏன் பழி போடுறீங்க! ஸ்டாலினுக்கு ரோஜா கேள்வி
வந்தவாசி: மத்திய அரசு வெள்ள நிவாரணம் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் மாநில அரசுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் மீது குறை சொல்வது தவறு என அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா செல்வமணி. இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். திருப்பதி, காஞ்சிபுரம் உள்ளிட்ட கோயில்களுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அது போல் திருத்தணி முருகன் கோயிலுக்கும் அண்மையில் சென்றார்.

அந்த வகையில் வந்தவாசியில் தென்னாங்கூர் ஸ்ரீருக்மாயி பாண்டுரங்கன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் நேற்று வந்திருந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து உள்ளே அழைத்து சென்றனர். இதையடுத்து அந்த கோயிலை சுற்றி பார்த்த அவர் ஸ்தல வரலாறுகளையும் கேட்டறிந்தார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் தமிழகத்தை போல் ஆந்திராவும் பாதிக்கப்பட்டது.
ஏனென்றால் புயல் அங்குதான் கரையை கடந்தது. தற்போது புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை, அதற்கு பதிலாக ஒரு சொற்ப தொகையை மட்டுமே வெளியிட்டிருந்தது. ஆந்திராவுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்ததா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து நடிகையும் அமைச்சருமான ரோஜா செல்வமணி கூறியிருப்பதாவது: புயல் வெள்ள பாதிப்புகளின் போது மத்திய அரசு நிவாரண நிதியை கொடுத்ததா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் மாநில அரசுக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது.
மாநில அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். எனவே அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் துணையாக இருக்க வேண்டியது மாநில அரசுதான். நம்மால் செய்ய முடியாமல் மத்திய அரசு மீது பழி போடுவது தவறு. மற்ற விஷயங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்காவிட்டால் நாம் கேள்வி கேட்கலாம்.

ஆனால் இந்த வெள்ள நிவாரண விவகாரங்களில் மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காட்டியும் மாநில அரசு மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்கினால் மட்டும்தான் மக்களை காப்பாற்ற முடியும் என அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். அமைச்சர் ரோஜாவுக்கும் அவருடை கணவர் செல்வமணிக்கும் தமிழக அரசுடன் இணக்கமான சூழல் உள்ளது.
இந்த நிலையில் மாநில அரசுக்கு ஆதரவாக பேசாமல் அமைச்சர் ரோஜா தமிழக அரசை குறை சொல்வது போல் சொன்னது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஜாவின் இந்த கருத்து தேர்தலில் பிரதிபலிக்குமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. பாஜக விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எப்போதும் வெளிப்படையான எதிர்மறை கருத்துகளை சொல்லாது.
மதில் மேல் உள்ள பூனை போல் எந்த பக்கமும் குதிக்காமல் இருக்கும். அதையே அமைச்சர் ரோஜாவும் கடைப்பிடித்துள்ளார் என்றுதான் அவருடைய பேட்டி பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications