பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. மணிப்பூரில் நொறுக்கப்பட்ட அலங்கார வளைவுகள்.. தீ வைத்து எரிப்பு!
இம்பால்: பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி அங்கு செல்லும் நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 13ஆம் தேதி) முதல் 15ஆம் தேதி வரை மணிப்பூர், மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

மணிப்பூர் வன்முறை
2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தின் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் கலவரமாக உருவெடுத்தது. மாநில முழுவதுமே கலவரக் காடாக மாறியது. இதன் காரணமாக பல மாதங்களாக அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது. இரு பெண்களை நிர்வாணமாக்கி அவர்களை சாலையில் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கலவரத்தின் காரணமாக அம்மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 260 பேர் வரை கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எப்போது மணிப்பூர் செல்வார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன்சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.
மணிப்பூர் செல்லும் மோடி
கலவரம் ஏற்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்த மணிப்பூர் மாநிலத்திற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி செல்வது பெரும் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் குக்கி இன மக்கள் வசிக்கும் சுராசந்த்பூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் அவர் செல்லவிருப்பதால், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு
பிரதமரின் வருகைக்கு குக்கி-சோ அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தாலும், சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பிரதமரை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கொடிகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர்.
அலங்கார வளைவுகள் தீ வைப்பு
பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பி.எஸ்.எஃப் ஹெலிபேட் அருகே உள்ள பியாசன்முன் கிராமம் மற்றும் போங்மோல் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரவு 9.10 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுராசந்த்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பான ஒருங்கிணைப்புக் குழு, நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications