கடவுளின் ஆணை: 16 மாத பெண் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாய்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடவுள் தனது கனவில் வந்து தனது 16 மாத பெண் குழந்தையை பலி கொடுக்கச் சொன்னதாகக் கூறி பெண் ஒருவர் தனது குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள நைஹதியில் இருந்து உள்ளூர் ரயில் ஒன்று நேற்று காலை 10.50 மணிக்கு கிளம்பியது. ரயில் ஹலிசாரை நோக்கி சென்றபோது பூர்ணிமா சாஹா என்ற ஒருவர் தனது 16 மாத பெண் குழந்தையான மமணியை ரயிலில் இருந்து தூக்கி வீசி எறிந்தார். இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஒரு பயணி சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றதும் பயணிகள் குழந்தை வீசப்பட்ட இடத்தை நோக்கி ஓடினர். அப்போது ரயில் தண்டவாளம் ஓரம் குடிசைகளில் வாழ்வோர் குழந்தையை காப்பாற்றியதை பார்த்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். தலை, கை மற்றும் கால்களில் காயம் அடைந்த குழந்தை நைஹதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் தலையில் மருத்துவர்கள் தையல் போட்டுள்ளனர். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பயணிகள் பூர்ணிமாவை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பூர்ணிமாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பூர்ணிமா கூறுகையில், மா தாரா(தாராபித் கோவிலில் உள்ள கடவுள்) என் கனவில் வந்து குழந்தையை தியாகம் செய் பலி கொடு இல்லை என்றால் மடிந்து போ என்று கூறினார். அதனால் தான் குழந்தையை ரயிலில் இருந்து வீசினேன் என்று திரும்பத் திரும்ப கூறினார்.
விசாரணையில் பூர்ணிமாவின் கணவர் கிருஷ்ணா சாஹா லாட்டரி டிக்கெட் விற்பவர் என்றும், அவர்களுக்கு மம்பி என்ற மகள் உள்ளதும் தெரிய வந்தது. மம்பி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications