கர்னல் ஷோபியா குரேசி பற்றிய சர்ச்சை கருத்து.. சாட்டை எடுத்த நீதிமன்றம்.. பாஜக அமைச்சர் மீது வழக்கு
போபால்: ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த கர்ணல் ஷோபியா குரேசியை, 'தீவிரவாதிகளின் சகோதரி' என்ற மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா கருத்து சர்ச்சையானது. இந்த வழக்கை தாமாக விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவால், காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலும் பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கர்னல் ஷோபியா குரேசி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கமளித்தனர்.
நாட்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை பெண் அதிகாரிகள் மூலம் உலகத்துக்கு விளக்கிய அணுகுமுறை அனைத்துத் தரப்பிலும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அந்த பெண் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளும் குவிந்தன. அதேநேரத்தில் மத்தியப்பிரேசம் மாநிலம் பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அமைச்சர் குன்வார் விஜய் ஷா, நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் சகோதரியை வைத்தே ஒழித்துவிட்டார் என்று சோபியா குரேசியை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாட்டுக்காக உயிரை பணயம் வைத்த ராணுவ அதிகாரியை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவதா என்று குன்வார் விஜய் ஷாவுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. பாஜக தரப்பிலும் எச்சரிக்கை விடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுக்கவே, அமைச்சர் குன்வார் விஜய் ஷா தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதற்காக எவ்வளவு முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்று அவர் கூறியிருந்தார். இருப்பினும் போர் பதற்றம் குறைந்த சில நாட்களிலேயே வெளியான பாஜக அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையானது.
இதை மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து நீதிபதிகள் அதுல் ஶ்ரீதரன், அணுராதா சுக்லா அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, "அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் டிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று எச்சரித்தனர்.
மேலும் "இதுபோன்ற கருத்துகள் மிகவும் ஆபத்தானது. இழிவானது. ராணுவ அதிகாரியை தீவிரவாதகளின் சகோதரி என்று சொல்லி பிரிவினை வாதத்தை தூண்டியுள்ளார். இதனால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படும். ராணுவத்தின் பணி நேர்மை, துணிச்சல், பாதுகாப்பு, தியாகம் ஆகியவற்றை ஆகியற்றை பிரதிபலிக்கிறது.
அவர் பேசியதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் நேரடியாக கர்னல் ஷோபியா குரேசியை மேற்கோள் காட்டுவதும் புலப்படுகிறது. அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்துவிட்டு, நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்." என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறை அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications