மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் எரித்த சுஷில் குமார் சர்மாவின் தூக்கு ரத்து!

டெல்லியில் 1995ஆம் ஆண்டு ஜூலை 2-ந் தேதியன்று தமது மனைவி நைனா ஷானியை சுஷில்குமார் சர்மா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின்னர் மனைவியின் உடலை டெல்லி அசோக் யாத்ரி நிவாஸ் ஹோட்டலுக்கு கொண்டு சென்றார். அங்கு மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி தந்தூரி அடுப்பில் வேக வைத்தார்.
இதனாலேயே இந்த வழக்கு 'தந்தூரி' வழக்கு என்றே கூறப்பட்டு வந்தது. தனது மனைவி, மட்லூப் கரீம் என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் இக்கொலையை செய்ததாக சுஷில்குமார் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகித்தார் சுஷில்குமார் சர்மா.
இந்த வழக்கில் சுஷில்குமார் சர்மாவுக்கு 2003ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் 2007ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றமும் சுஷில்குமார் சர்மாவின் தூக்கை உறுதி செய்தது.
பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு மீது கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் இன்று சுஷில்குமாரின் தூக்கை ரத்து செய்து, ஆயுள்தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications