நரேந்திர மோதியின் 'டிஜிட்டல் ஹெல்த் கார்டு' திட்டம் - நன்மைகளும், கவலைகளும்

Subscribe to Oneindia Tamil

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதன் கீழ், இப்போது இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். ஆனால், இந்த திட்டம் தங்களுக்கு எப்படி பலன் தரும் என்ற கவலை பலருக்கு எழுந்துள்ளது.

இது ஒரு டிஜிட்டல் ஹெல்த் கார்டாக இருக்கும். இதில் மக்களின் சுகாதார பதிவுகள் அதாவது ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

இது ஒரு தனித்தன்மையான அடையாள அட்டையாக இருக்கும். அதில் உங்கள் நோய், சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்.

இதைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோதி, சுகாதாரத் துறையில் இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என்று கூறினார்.

"கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் இயக்கம், இன்றிலிருந்து ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. இன்று துவக்கிவைக்கப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் சுகாதார வசதிகளில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு பெரிய சக்தியாக இருக்கும்," என்று பிரதமர் தெரிவித்தார்.

"ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், மருத்துவமனை செயல்முறைகளை எளிமையாக்குவதோடு கூடவே வாழ்க்கை எளிதாவதையும் அதிகரிக்கும். தற்போது, மருத்துவமனைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஒரு மருத்துவமனை அல்லது ஒரு குழுமத்திற்கு என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இயக்கம், நாட்டின் எல்லா மருத்துவமனைகளின் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை, ஒன்றுக்கொன்று இணைத்துவிடும். இதன் கீழ், நாட்டு மக்களுக்கு இப்போது டிஜிட்டல் ஹெல்த் ஐடி கிடைக்கும். ஒவ்வொரு குடிமகனின் சுகாதார பதிவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்."

சுகாதார அட்டை என்றால் என்ன

டிஜிட்டல் ஹெல்த் கார்டு ஒரு வகையில் ஆதார் கார்டு போல இருக்கும். இந்த அட்டையில் நீங்கள் 14 இலக்க எண்ணைப் பெறுவீர்கள். இந்த எண், சுகாதாரத் துறையில் அந்த நபரை அடையாளம் காட்டும். இதன் மூலம், நோயாளியின் மருத்துவ வரலாற்றை அறிய முடியும்.

ஒரு வகையில் இது உங்கள் உடல்நலத் தகவல்களுக்கான கணக்கு என்று கூறலாம். இதில் உடல்நலம் தொடர்பான பல தகவல்கள் பதிவு செய்யப்படும். ஒரு நபருக்கு எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்த மருத்துவமனையில் செய்யப்பட்டது, என்ன சோதனைகள் செய்யப்பட்டன, என்ன மருந்துகள் வழங்கப்பட்டன, நோயாளியின் உடல்நலப் பிரச்சனைகள் என்ன, நோயாளி ஏதேனும் சுகாதாரத் திட்டத்துடன் தொடர்புடையவரா என்பது போன்ற தகவல்கள் இதில் இருக்கும்.

அட்டையை எப்படிப்பெறுவது?

  • இதை ஆதார் அட்டை அல்லது மொபைல் எண் மூலம் உருவாக்கலாம்.
  • ஹெல்த் அட்டையை பெற, ஒருவர் ndhm.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். "ஹெல்த் ஐடி" என்ற பெயரில் ஒரு தலைப்பு தோன்றும்.
  • இந்த வசதியைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பெறலாம். கூடவே கார்டை உருவாக்குவதை தொடர 'க்ரியேட் ஹெல்த் ஐடி' ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
  • அடுத்த வலைப்பக்கத்தில், ஆதார் மூலமாகவோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஹெல்த் கார்டை உருவாக்குவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். ஆதார் எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளிடும்போது ஒரு OTP அனுப்பப்படும். OTP ஐ நிரப்புவதன் மூலம் நீங்கள் அதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஒரு படிவம் உங்களுக்கு முன்னால் திறக்கும். உங்கள் சுயவிவரங்களுக்காக அதில் நீங்கள் ஒரு புகைப்படம், உங்கள் பிறந்த தேதி மற்றும் முகவரி உட்பட மேலும் சில தகவல்களை கொடுக்க வேண்டும்.
  • எல்லா தகவல்களும் நிரப்பப்பட்டவுடன், ஒரு ஹெல்த் அட்டை வந்துவிடும். அதில் உங்களுடன் தொடர்புடைய தகவல்கள், புகைப்படம் மற்றும் ஒரு QR குறியீடு ஆகியவை இருக்கும்.
  • சொந்தமாக ஹெல்த் அட்டையை உருவாக்க இயலாதவர்கள் அரசு மருத்துவமனை, சமூக சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் கும்பநல மையம் அல்லது தேசிய சுகாதார உள்கட்டமைப்பு பதிவேட்டில் இணைந்த சுகாதார வழங்குநரிடமிருந்து தங்கள் அட்டையை உருவாக்கிக்கொள்ளலாம்.

தரவு எவ்வாறு உள்ளிடப்படும்

இந்த டிஜிட்டல் ஹெல்த் கார்டில் நோயாளியின் முழுமையான மருத்துவத் தரவை வைத்திருக்க, மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள், மத்திய சர்வரோடு இணைக்கப்படுவார்கள். மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்களும் இதில் பதிவு செய்யப்படுவார்கள்.

இதற்காக நீங்கள் 'NDHM ஹெல்த் ரெக்கார்ட்ஸ் செயலியை' ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் நீங்கள் உங்கள் ஹெல்த் ஐடி அல்லது PHR அட்ரஸ் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையலாம்.

இந்த செயலியில் நீங்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அல்லது சுகாதார வசதியைக் கண்டறிந்து இணைக்க வேண்டும். அவர்களுடன் இருக்கும் உங்கள் உடல்நலம் தொடர்பான தரவு, இந்த மொபைல் செயலியில் வந்துவிடும். மருத்துவமனைகளில் நிறுவப்பட்டிருக்கும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் மருத்துவமனையை இணைக்க முடியும்.

நீங்கள் விரும்பினால், உங்கள் மருந்துசீட்டு, சோதனை அறிக்கை அல்லது பிற தகவல்களையும் இந்த செயலியில் உள்ளிடலாம். இதற்காக லாக்கர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர், சுகாதார பணியாளர் மற்றும் எந்தவொரு மருத்துவமனையும் உங்கள் ஒப்புதலுடன் உங்கள் உடல்நலத் தரவை 14 இலக்க தனித்துவ அடையாள அட்டையின் மூலம் பார்க்க முடியும். உங்கள் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும்..

பயனர் எப்போது வேண்டுமானாலும் தனது சுகாதார பதிவை நீக்கமுடியும்.

சுகாதாரம்
Getty Images
சுகாதாரம்

இதன் நன்மைகள் என்னென்ன?

  • டிஜிட்டல் கார்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் முந்தைய மருத்துவரின் மருந்து சீட்டுகள் மற்றும் சோதனை அறிக்கைகளை உங்களுடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை. மேலும், ஏதேனும் ஆவணம் தொலைந்து விட்டால் கவலைப்படத் தேவையில்லை.
  • பழைய சோதனை அறிக்கை இல்லையென்றால், மருத்துவர் எல்லா சோதனைகளையும் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்.
  • நீங்கள் எந்த நகரத்தில் சிகிச்சை பெறச்சென்றாலும், மருத்துவர் உங்கள் கடந்தகால சுகாதாரத் தகவல்களை இந்த தனித்துவமான ஐடி மூலம் பார்க்க முடியும்.
  • இந்த ஹெல்த் ஐடி இலவசம் மற்றும் இது அனைவருக்கும் கட்டாயமாக இருக்காது. இருப்பினும், அனைவரும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி.
  • நோயாளியின் ஒப்புதலுடன் உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் உடல்நலப் பதிவுகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம்.
ஹேக்கர்
iStock
ஹேக்கர்

தரவு பாதுகாப்பு பற்றிய கவலைகள்

இந்த ஹெல்த் கார்டில் உள்ள அனைத்து தரவும் டிஜிட்டலாக இருக்கும். இது சேவையகத்தில் சேகரிக்கப்படும்.

மக்கள் தங்கள் தரவை தனிப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழலில் டிஜிட்டல் முறையில் வைத்திருக்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் கருதினாலும், அதனுடன் தொடர்புடைய ஆபத்துகள் பற்றியும் எச்சரிக்கின்றனர்.

உங்களிடம் உள்ள ஆவணத்தை நீங்களே பாதுகாக்கிறீர்கள். ஆனால் தரவை சேவையகத்தில் வைத்தால், அதன் பாதுகாப்புக்காக நீங்கள் அரசை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது மற்றும் பாதுகாப்புக்கான உறுதியையும் கொடுக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சைபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

உதாரணமாக, ஆதார் அட்டை தரவு முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதார் அட்டையின் தரவை ஹேக்கர்கள் திருடிய நிகழ்வுகளும் உள்ளன. எனவே டிஜிட்டல் ஹெல்த் கார்டும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பலியாகுமா?

"டிஜிட்டல் ஹெல்த் கார்டு ஒரு பாராட்டுக்குரிய படியாகும். இது சரியான நோக்கத்துடன் செய்யப்பட்டது . ஆனால் ஹெல்த் கார்டுடன் தொடர்புடைய பல அடிப்படை சவால்கள் உள்ளன, " என்கிறார் இணைய பாதுகாப்பு நிபுணர் பவன் துக்கல்.

"இங்குள்ள மிகப்பெரிய சவால் தரவு திருட்டாக இருக்கலாம். சைபர் குற்றவாளிகளுக்கு உடல்நலத் தரவுகள் மிகவும் ஈர்ப்புடையதாக இருக்கும், ஏனெனில் இதற்கு நல்ல விலை கிடைக்கும். இந்த தரவு திருடப்படலாம், மாற்றப்படலாம். தரவு மாற்றம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது அந்த நபரின் நோயையும் சிகிச்சையையும் மாற்றும். இது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

தரவு பாதுகாப்பு சட்டம் இல்லை

இணைய பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று செய்யப்படும் அறிவிப்புகளில் இருந்து எதுவுமே தெரியவில்லை என்று பவன் துக்கல் சுட்டிக்காட்டுகிறார்.

"இந்தியாவில் தரவு பாதுகாப்புச் சட்டம் இல்லை. தரவு பாதுகாப்பு மசோதா 2019 மட்டுமே உள்ளது. இது தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையின் கீழ் உள்ளது. சட்டமே இல்லாதபோது, மக்களின் சுகாதாரத் தரவு எவ்வாறு பாதுகாக்கப்படும். ஒரு சட்டம் இருந்தால், அபராதம் அல்லது தண்டனை விதிக்கமுடியும். குற்றம் செய்வதற்கு முன் ஒருவர் இதை நினைத்து பயப்படுவார்."

அதே நேரத்தில், தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் இணையதளத்தில், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) உங்கள் எந்த சுகாதார பதிவுகளையும் சேமிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஒப்புதலுக்குப் பிறகுதான் உங்கள் பதிவுகள் , மருத்துவர் அல்லது சுகாதார வசதியுடன் பகிரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், எவ்வளவு நேரம் அனுமதிப்பது மற்றும் எந்த பதிவுகளைக் காண்பிப்பது என்பதையும் முடிவு செய்யலாம்.

ஆயினும்கூட, அச்சங்களும், சவால்களும் உள்ள பல கேள்விகள் இப்பொதும் நம் முன்னே உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+