கூட்டணி வாய்ப்பை தவறவிட்டது மெகபூபாதான்! நாங்க கிடையாது.. ஓமர் அப்துல்லா விளக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், இந்த தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், காங்கிரஸ்+தேசிய மாநாட்டு கட்சியுடன் மெகபூபா கூட்டணி வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டணி அமையவில்லை. இதற்கு மெகபூபாதான் காரணம் என்று ஓமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பில், ஒரு லோடு மண் அள்ளி போட்டது தேர்தல் ரிசல்ட். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியது. அதேநேரம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அம்மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
எதிர்க்கட்சிகள் என்ன வலியுறுத்தினாலும், அசைந்து கொடுக்காமல் இருந்த மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தேர்தல் தொடர்பாக அதிரடியாக உத்தரவு போட்டது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே வேறு வழியின்றி மத்திய அரசு தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கிறது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
ஏற்கெனவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஜம்மு காஷ்மீரின் அனைத்து கட்சிகளும் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியுடன் மட்டுமே ஒப்பந்தம் எட்டப்பட்டது.
மிக முக்கிய கட்சியான மக்கள் ஜனநாக கட்சி இந்த கூட்டணியில் இணையவில்லை. இது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி மீது பழியை போட்டார்.
இந்நிலையில் இதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா விளக்கமளித்துள்ளார். அதில், கூட்டணி வாய்ப்பை தவறவிட்டது மெகபூபாதான். கடைசிவரை கூட்டணிக்கான கதவு திறந்து இருந்தது என்று ஓமர் கூறியுள்ளார். இது அம்மாநில அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications