20 கொலை உட்பட 100 வழக்குகள்.. போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் நயீமின் பகீர் பின்னணி
ஹைதராபாத்: ஹைதராபாத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவிலுள்ள சாத்நகரில் பிரபல கேங்ஸ்டர் நயீம் இன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார். இவர் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பல காலமாக அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய ரவுடியாகும்.
தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின், நலகோண்டா மாவட்டம் புவன்கிரியை சேர்ந்தவர் நயீம். 15 வருடங்கள் முன்பு, ஆந்திராவில் நக்சலைட் தீவிரவாதம் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில், நயீம், நக்சலைட் தீவிரவாதியாகினார்.

அந்த அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து, நக்சலைட் இயக்கத்தில் நீடிக்க முடியாமல் தப்பியோடி, கேங்ஸ்டராக மாறினார் நயீம்.

கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்களை செய்து வந்தார் நயீம். ஐபிஎஸ் அதிகாரி வையாஸ், முன்னாள் நக்சலைட்டுகள் சாம்பசிவுடு, ராமுலு ஆகியோரை கொலை செய்ததாக நயீம் மீது வழக்கு உள்ளது. சுமார் 100 வழக்குகள் இவர் மீது இருந்தன, அதில் 20 கொலை வழக்குகள் என்பதில் இருந்தே நயீமின் கொடூரத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். நாட்டை உலுக்கிய சொரபுதீன் என்கவுண்டர் வழக்கிலும் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 12 வருடமாக ஆந்திரா மற்றும் சமீபத்தில் உருவான தெலுங்கானா மாநிலங்களை அச்சுறுத்தி வந்தார் நயீம். 15 வருட காலமாக தேடப்பட்டு வந்த நயீம் ஒருவழியாக தெலுங்கானா போலீசாரின் என்கவுண்டரில் இன்று கொல்லப்பட்டுள்ளார். இது பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications