மருத்துவர் கொலை! மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லாததே சம்பவத்திற்கு காரணம்: தேசிய மகளிர் ஆணையம்
கொல்காத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியள்ளது.
கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.

இந்த கொலை அதிகாலையில் 3-6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. இந்த நேரத்தில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்கையில், ப்ளூடூத் இயர்ஃபோனுடன் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் திரும்ப வெளியே செல்லும்போது அவர் காதுகளில் ப்ளூடூத் இயர்ஃபோன் இல்லை. அது மருத்துவரின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேற்குவங்கம், டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் மருத்துவர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை சம்பவம் குறித்து, சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், "மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், இதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த பகுதியை புனரமைத்து வருகின்றனர். இது ஆதரங்களை அழிப்பது போன்றதாகும். அதேபோல மேற்குவங்க காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது" என்று ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆணையத்தின் உறுப்பினர் டெலினா கோண்ட்குப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சோமா சவுத்ரி ஆகியோர் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications