நீட் வினாத்தாள் கசிவு.. ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம்.. பீகாரில் கைமாறிய லஞ்சம்? வெளியான திடுக் தகவல்
பாட்னா: பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு ஆரம்பம் முதலே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வு முறைக்கு எதிராகப் போராடி வந்தது. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வு முறை, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வட இந்திய மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியிருந்தார்.
கேரளாவிலும் கூட நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக கூறிய தேசிய தேர்வு முகமை குறிப்பிட்ட அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவதாக அறிவித்திருக்கிறது.
பல்வேறு முறைகேடுகள் என புகார் கிளம்பி இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மறுபுறம் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் பீகாரில் நான்கு மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 'ஒரு மாணவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை பணம் கைமாறியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கைதான மாணவர்கள் சில பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக வினாத்தாள் கிடைத்ததால் அதில் உள்ளதை மட்டும் படித்து தேர்வு எழுதியிருக்கலாம் எனவும் வினாத்தாள் முழுமையாக அல்லது ஒரு பகுதி மட்டும் கிடைத்து இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications