மாநில அரசு மூலமாகவே மானியங்களை வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்- ஓ.பி.எஸ். கோரிக்கை
டெல்லி: மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியை மத்திய அரசு தாராளமாக அளிக்க வேண்டும். அதிக அளவில் நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு உதவி செய்வதில் தயக்கம் காட்டக் கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற முதலாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரையிலிருந்து:
எங்கள் தலைவர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. மத்திய நிதிக்குழு கூட்டத்தில் மத்திய நிதிக்குழுவையும், முதல்வர்களையும் அங்கத்தினர்களாக சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சிறப்பான வளர்ச்சிகளுக்கு இடமளிக்கும்.
மக்களுக்கான சில நிதி உதவிகளை தமிழ்நாட்டில் வங்கிகள் மூலமே வழங்கி வருகிறோம். கல்வி உதவி தொகை, பெண்கள் பேருகால உதவித்தொகை உள்ளிட்டவை இதன் மூலம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வங்கி மூலம் மங்களுக்கு வழங்கும் நிதி உதவிகளை மாநில அரசு மூலமே வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ரூ. 22 ஆயிரம் கோடிக்கு பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. 22 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்றுள்ளது. 18 இடங்களில் இதன் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு கணிசமான நிதிகளை வழங்க வேண்டும். விவசாய திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

போதிய நீர் வளம் இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். நதிகளை இணைப்பது பற்றி எங்கள் தலைவர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதன்படி மகாநதி, பெண்ணையாறு, பாலாறு, காவிரி, போன்றவற்றை இணைக்க வேண்டும். மேலும் பம்பா, அச்சன்கோவில் நீரை வைப்பாற்றுக்கு திருப்பிவிட வேண்டும்.
பயிர் வகைகள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு மத்திய அரசின் உதவிகள் அதிகம் தேவை. இதை மத்திய அரசு செய்ய வேண்டும்.
சுகாதாரத்தை பற்றி தமிழகம் முன்னணியாக செயல்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்தை எங்கள் தலைவர் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் 3802 பெண் குழந்தைகளும், 821 ஆண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய நிதி குழுவின் மாநில முதல்வர்களை சேர்த்திருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில் இதனுடைய செயல்பாடுகள் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். முந்தைய திட்டக்குழு போல செயல்பாடுகள் இருக்க கூடாது.
மேக் இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பங்களிக்கும் வகையில் எங்கள் தலைவர் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்களை உருவாக்கி உள்ளார். தமிழ்நாட்டின் தென் பகுதியில் பின்தங்கிய 9 இடங்களில் தொழில் பூங்காவை அமைக்க திட்டம் வகுக்கக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறு, மற்றும் நடுத்தர குறு தொழில் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை மேம்படுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு விதமான முதலீடுகளையும் தமிழகம் ஈர்த்து வருகிறது.
மத்திய அரசு தூய்மை திட்டத்தை அறிவித்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் முழு சுகாதார திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம பகுதிகளும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வேகமான வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எங்கள் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகளும் தாராளமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.
எங்கள் தலைவரின் வழிக்காட்டுதலின்படி தமிழ்நாடு தேசிய வளர்ச்சிக்கு பல்வேறு விதங்களில் உதவியாக இருக்கும் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
வழக்கம் போல முதல்வரின் பேச்சு நெடுகிலும் ஏகப்பட்ட இடங்களில் எங்கள் தலைவர் ஜெயலலிதா என்ற வார்த்தை விரவிக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டஙகள் குறித்தும் தனது உரையில் விளக்கியிருந்தார் பன்னீர் செல்வம்.
நேற்றே டெல்லி பயணம்
முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றே முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி போய் விட்டார். அவருடன் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications