மம்தாவை எதிர்த்து போட்டியில்லை.. நெருக்கம் காட்டும் காங்கிரஸ்...உருவாகிறது தேசிய அளவிலான கூட்டணி?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடுவதில்லை என காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் நெருங்கி வருவது தேசிய அரசியலில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கழுதைத்தேய்ந்து கட்டெறும்பு என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது அதற்கு கடிவாளம் போட்டு நிறுத்தியவர் மம்தா பானர்ஜி. அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த இளம் தலைவராக 1997-ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத்தொடங்கினார்.

பின்னர் திரிணாமூல் கட்சி தனிக்கட்சியாக வளர்ந்த நிலையில் 2011 ஆ ஆண்டு மம்தா மேற்கு வங்கத்தில் ஆட்சியைப்பிடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆம் முறையும் மம்தா முதல்வராகியுள்ளார். இரண்டு முறை முதல்வராக மம்தா தேர்வானபோது அவரை மேற்கு வங்கத்தில் எதிர்த்த கட்சிகள் சிபிஎம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை.
2019 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தவுடன் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தை குறி வைத்து காய் நகர்த்தியது. அதிலும் மேற்கு வங்கத்தை கைப்பற்றியே தீருவது என மோடி, அமித்ஷா இருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றினர். பாஜகவின் அனைத்து இந்திய தலைவர்களும் வங்கத்தில் இறங்கி பணியாற்றினர்.
பாஜக மம்தா பானர்ஜியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதற்காக அனைத்து வழிகளையும் பயன்படுத்தினர். மம்தாவுக்கு அடுத்த இடத்திலிருந்த முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் மம்தா கடும் கோபம் அடைந்தார். பாஜகவை கடுமையாக எதிர்த்தார். இம்முறிஅயும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மே.வங்கத்தில் மும்முனை போட்டி நிலவியது. ஆனாலும் மம்தா பானர்ஜி தனிப்பெரும்பான்மை பெற்றார்.
ஆனாலும் பாஜக 77 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இரண்டாம் இடம் பெற்றது. ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் என்கிற கதையாக திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி மம்தா தோற்றுப்போனார். ஆனாலும் முதல்வராக அவர் பதவி ஏற்றார். இம்முறை தனது நிலைப்பாட்டை மம்தா சிறிதளவு மாற்றியுள்ளார். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர், பாஜகவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முடிவெடுத்தார்.
டெல்லி பாஜக தலைவர்களுக்கு மாநில அளவில் சிம்ம சொப்பனமாக இருக்கும் மாநிலங்கள் 3 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம். இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா இவர்களை எதிர்ப்பதன் முன்னணியில் இருப்பதன் மூலம் தேசியத்தலைவராக உருவெடுத்து வருகிறார். 2024 மக்களவைத்தேர்தலை நோக்கி அனைத்துக் கட்சிகளும் சிந்திக்கும் வேளையில் மம்தாவின் நிலைப்பாட்டிலும் மாற்றம் வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை நோக்கி அவர் நெருக்கம் காட்டி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கூட்டணி அமைய மம்தாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்கிற வகையில் அவர் தேசிய அரசியலை நோக்கி பக்குவப்பட்ட நிலையில் திரும்புகிறார். சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை மம்தா சந்தித்ததும், காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கலந்துக்கொண்டதும் அவர் பாஜகவை வீழ்த்த புதிய முடிவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
இந்நிலையில் தேர்தலில் தனது கட்சியிலிருந்து பிரிந்துச் சென்ற முக்கிய வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் நந்திகிராம் தொகுதியில் தோல்விடைந்த மம்தா 6 மாதத்தில் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதால் மம்தா பானர்ஜி எப்போதும் போட்டியிட்டு வெல்லும் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் அமைச்சரும், இந்தத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார்.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இடைத் தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, "பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியும், ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைனும், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாமும் போட்டியிடுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பவானிபூரில் போட்டியிடும்பட்சத்தில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனத் தெரிகிறது. பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் திரிணாமூல் காங்கிரஸ் உறவு மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.
இதற்கிடையே மம்தா போட்டியிடும் பவானிபூரில் வீணாக போட்டியிட்டு பணத்தை செலவு செய்து வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டாம் என பாஜகவுக்கு திரிணாமூல் எச்சரிக்கை விடுத்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மதன் மித்ரா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு நேரத்தையும் , பணவிரையத்தையும் எதிர்க்கொள்ள வேண்டாம் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் இருப்பதன்மூலம் இரு கட்சிகளின் உறவு வலுவடைந்தால் அது தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும் அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும்.












Click it and Unblock the Notifications