டெல்லி பேரணியில் 'மப்ளர் மேன்' கெஜ்ரிவால் மீது முட்டை, கல் வீச்சு
டெல்லி: சட்டசபை தேர்தலையொட்டி டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டைகள் மற்றும் கல் வீசப்பட்டன.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் திங்கட்கிழமை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேரணியில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் ஒருவர் முட்டைகள் மற்றும் கல்லை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.
அவர் வீசிய முட்டைகளும், கல்லும் கெஜ்ரிவால் மீது படவில்லை மாறாக அவர் நின்று கொண்டிருந்த மேடையில் தான் விழுந்தது. அவர்கள் பதற்றத்தில் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ளாதீர்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சுல்தான்பூர் மஜ்ரா பகுதியில் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இது இரண்டாவது முறையாகும். கடந்த மாதம் இதே பகுதியில் நடந்த பேரணியில் கெஜ்ரிவால் தாக்கப்பட்டார்.
முன்னதாக லோக் சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராக்கி பிர்லாவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் வட மேற்கு டெல்லியில் பிரச்சாரம் செய்தபோது ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர் மீது வாகனத்தை ஏற்றினார். பேரணிகளில் கெஜ்ரிவால் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல.


Click it and Unblock the Notifications
